ஆன்லைன் சூதாட்ட தடை அமலுக்கு வந்தது: தடையை மீறினால் 3 ஆண்டு சிறை; ரூ10 லட்சம் அபராதம்..!

ஆன்லைன் சூதாட்ட தடை அமலுக்கு வந்தது: தடையை மீறினால் 3 ஆண்டு சிறை; ரூ10 லட்சம் அபராதம்..!
By: TeamParivu Posted On: October 30, 2022 View: 95

தமிழக சட்டசபையில் கடந்த 19ம் ேததி நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. 

இனிமேல் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டு கடன் சுமைக்கு ஆளாகி இளைஞர்கள். மாணவர்கள், குடும்ப தலைவர்க உள்ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர்.

காவல் துறையைச் சேர்ந்தவர்கள்கூட தற்கொலை செய்து கொண்டனர். எனவே, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

இதற்கிடையில், அரசு சார்பில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதாக 70 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்து இருந்தனர். மேலும், கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுவதாக 67 சதவீதம் பேரும், மாணவர்களின் அறிவுத் திறன், சிந்தனைத் திறன், எழுத்துத் திறன் குறைந்திருப்பதாக 74% பேரும், மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகரித்திருப்பதாக 76% பேர், ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வதாக 72 % ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 735 பேரிடம் கருத்துகள் பெறப்பட்டது. இதில் 99 சதவீதம் பேர், அதாவது 10 ஆயிரத்து 708 பேர் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு மசோதா கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான, சட்ட மசோதா கடந்த 19ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த மசோதா கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை சட்டம் மூலம், தமிழகத்தில் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணம் (அல்லது வெகுமதிகள்) வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருதப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் (ரம்மி, போக்கர்) தடை செய்யப்படுகிறது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக் கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக் கூடாது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச்சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு ரத்து செய்யப்படும்.

இதற்கு 15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு குழுவை, ஒரு தலைவர் (ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி) மற்றும் 2 உறுப்பினர்களை கொண்டு அரசு அமைக்கும். உள்ளூரில் இல்லாத ஆன்லைன் விளையாட்டு வழங்குபவர் எவரும், எந்தவொரு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையோ, பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையோ, ஒழுங்குமுறைக்கு மாறான விளையாட்டுகளையோ வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால், அந்த விளையாட்டு வழங்குபவரை தடை செய்வதற்கு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
#ரம்மி  # ஆன்லைன் சூதாட்ட  # கவர்னர்  # தமிழக அரசு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..