பலவீனமான சுற்றுச்சுவரை அப்புறப்படுத்துங்கள்!: பருவமழையில் இருந்து மக்களை காக்க வேண்டும், அது ஒன்றே நமது இலக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

பலவீனமான சுற்றுச்சுவரை அப்புறப்படுத்துங்கள்!: பருவமழையில் இருந்து மக்களை காக்க வேண்டும், அது ஒன்றே நமது இலக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!
By: TeamParivu Posted On: November 01, 2022 View: 88

பருவமழையில் இருந்து மக்களை காக்க வேண்டும், அது ஒன்றே நமது இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர்,

வருமுன் காப்பதே அரசு -
வந்த பின் திட்டமிடுவது இழுக்கு

- என்கின்ற அந்த அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆலோசனைக் கூட்டத்தை நாம் இங்கே நடத்தி இருக்கிறோம். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு அனைத்து மாவட்ட நிர்வாகமும் ஆயத்த நிலையில் இருப்பதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
ஒரு பிரச்சனையின் தீவிரத்தை நாம் உணர்ந்தால் - அந்த பிரச்சனையைப் பாதி வென்றதாகப் பொருள். 

ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நாம் நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டால் - அந்தப் பிரச்சனையை முழுமையாக வென்றுவிட்டதாகவே அது அமைந்துவிடும். அந்த அடிப்படையில், எந்தவித பேரிடரையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை அறிந்து உங்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழையும் - சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்றையதினம் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.  

இதன் அறிகுறியாக நேற்று முதலே மழை பெய்யத் தொடங்கி விட்டது. மிக கனமழை - கனமழை - சில இடங்களில் சூறாவளிக் காற்று ஆகியவை இருக்கக் கூடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதனை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு நாம் பெருமழையைச் சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தது. இதேபோல் மற்ற சில மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மீண்டும் அதேபோன்ற ஒரு நிலை எங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முடிவெடுத்து, அதற்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க மரியாதைக்குரிய திருப்புகழ் அவர்களின் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அவர்கள் அளித்த ஆலோசனையின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்கள் அனைத்திலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் முடிந்திருக்கும் என்றே நான் கருதுகிறேன். இம்முறையும் மழைநீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தினுடைய கடமையும் பொறுப்பும் ஆகும். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் இருக்கிறது. இதனை உங்களது சார்நிலை அலுவலர்கள் அனைவருக்கும் நீங்கள் உணர்த்தி செயல்பட வைக்க வேண்டும்.

குறிப்பாக, மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும்.

* மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.

* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாக்க அதற்குரிய ஏற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும்.

* பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

* பழுதடைந்த / பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

* வயல்வெளிகளில் பயிர் சேதம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

* பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்குதல், பால் விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல், சமுதாய உணவுக்கூடம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

* கரையோரப் பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் முன்னதாகவே அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

* மாநகர மற்றும் நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் அது தொடர்புடைய பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித்தனியாக இயங்காமல், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசுத் துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும் சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படவேண்டும்.

* பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்ப வேண்டும்.

* நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும்.

* பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

* மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

- மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும். அது ஒன்றே நம்முடைய இலக்கு!

நம்முடைய கவனத்திற்கு வரும் பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தர வேண்டும். தொலைபேசி மூலமாகவோ - வாட்ஸ்அப் வழியாகவோ வரக்கூடிய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுங்கள். அதிகாரிக்கு அனுப்பினோம், உடனே சரிசெய்து கொடுத்தார்கள் என்று பொதுமக்கள் சொல்வதுதான், மிகப்பெரிய பாராட்டாக இருக்க முடியும்.

சிறு தவறு என்றாலும் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும். 
அதேநேரத்தில் சிறு உதவி என்றாலும், அது பெரிய நல்ல பெயரையும் ஏற்படுத்தும் என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம்.

இயற்கைப் பேரிடர் காலம் என்பது ஒரு அரசுக்கு சவாலான காலம்!

அந்தச் சவாலை மக்கள் ஆதரவோடு சேர்ந்து நாம் அனைவரும் வெல்வோம்.

உங்களது அனைத்து ஆலோசனைகளையும் உடனுக்குடன் அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

Tags:
#முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  # பருவமழை  # முதல்வர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..