
உயர் கல்வி மன்றம் மூலம் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து எல்லா பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைக்கு வரும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்றத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் பொன்முடி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ளது போல கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மாணவர்கள் வேலை பெறுபவராக மட்டும் இல்லாமல் வேலை வழங்குபவராகவும் மாற வேண்டும் என்ற அடிப்படையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பாடத்திட்டங்கள் உருவாக்க அறிவுறுத்தியுள்ளோம்.
கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. எனவே இந்த பாடத்திட்டங்களில் கணினி அறிவியல் மற்றும் நான் முதல்வன் பாடங்கள் உள்ளிட்டவை இணைத்து உயர் கல்வி மன்றம் மூலமாக புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றை துணை வேந்தர்களிடம் கொடுத்துள்ளோம். அதில், மாற்றங்கள் இருந்தால் அரசுக்கு தெரிவிக்கலாம். அடுத்த கல்வி ஆண்டில் இருந்து புதிய பாடத்திட்டங்கள் எல்லா பல்கலைக் கழகங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி பாடங்களும் கட்டாயமாக 2 வருடத்திற்கு கற்றுதரப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எந்த பாடப்பிரிவு பயின்றாலும் மாணவர்களுக்கு வேலை பயிற்சி, திறன் வளர்ப்பு உள்ளிட்டவை வழங்கப்படும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் உள்ளது போன்று மற்ற கல்லூரிகளிலும் தேவைக்கு ஏற்ப புதிய பாடபிரிவுகள் தொடங்க அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ் வழி படிப்பை அதிகரிக்க நான் முதல்வன் திட்டம்
அமைச்சர் பொன்முடி மேலும் கூறியதாவது: தமிழ் வழியில் இன்ஜினியரிங் சேர்க்கை அதிகாரிக்க நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பாடதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் வழியில் அவற்றை கற்று கொடுக்கும்பொழுது அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வருகின்ற காலங்களில் தமிழ்வழி இன்ஜினியரிங் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெறவேண்டுமென்றால் தமிழில் தேர்வு எழுத வேண்டும். எனவே அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
Tags:
#உயர்கல்விமன்றம்
# பாடத்திட்டங்கள்
# உயர்கல்வித்துறை
# அமைச்சர்