
கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சீல் வைக்கப்பட்டது.
அதேபோல இன்புளூயன்சா காய்ச்சல் ஏற்பட்டோரின் வீடுகளுக்கும் சீல் வைக்கப்படுமா என்ற கேள்விக்குச் சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2020இல் இந்தியாவில் நுழைந்த கொரோனா பாதிப்பு, அதன் பின்னர் நம்மை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளை நாம் ஏற்கனவே இழந்துவிட்டோம்.
வேக்சின் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் கொரோனா பாதிப்பு இப்போது தான் குறைந்திருந்தது. உலகம் மெல்ல மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதனிடையே இப்போது இன்புளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது.
தமிழ்நாட்டிலும் கூட பல பகுதிகளில் இந்த H3N2 இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுக்க பரவும் இந்த H3N2 இன்புளூயன்சா காய்ச்சலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் நம்மைப் படாதபாடு படுத்திவிட்ட நிலையில் இன்புளூயன்சா காய்ச்சலும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது.
இதனிடையே ப்ளூ காய்ச்சல் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது இன்புளூயன்சா காய்ச்சலால் பெரியளவில் அச்சம் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், இன்புளூயன்சா காய்ச்சல் பரவக் கூடாது என்பதற்காகவே பாதிப்பு ஏற்பட்டவர்களைத் தனிமையில் இருக்க அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். இதன் மூலம் இன்புளூயன்சா காய்ச்சல் மற்றவருக்குப் பரவுவது மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பரவுவதும் நிறுத்தும்.
மேலும், கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சீல் வைக்கப்பட்டது. அதேபோல இன்புளூயன்சா காய்ச்சல் ஏற்பட்டோரின் வீடுகளுக்கும் சீல் வைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சு, 'கொரோனா பரவ தொடங்கிய காலத்தில், அதைக் கண்காணித்து சீல் வைக்கப்பட்டது. இன்புளூயன்சா காய்ச்சலுக்கு எல்லாம் அதுபோல செய்ய மாட்டோம். தனியாக இருக்கக் கூறுவதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான். ஏதாவது பிரத்தியேக நோய்ப் பாதிப்பு இருந்தால் அரசிடம் தெரிவிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
ப்ளூ காய்ச்சல் பருவ மழைக் காலத்தில் வரும் இயல்பான ஒன்று தான், தென்கிழக்கு பருவமழை, வடமேற்கு பருவமழை காலத்தில் இதுபோன்ற ப்ளூ பாதிப்புகள் வருவது இயல்பு தான். இருப்பினும், ப்ளூ காய்ச்சல் பாதிப்பு வீரியமாக இல்லை.. 2,3 நாட்கள் ரெஸ்ட் எடுத்தால் போதும் சரியாகிவிடும். இன்புளூயன்சா காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகளை அனைத்து மருத்துவமனைகளில் மருந்துகள் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம்.' என்றார்.
Tags:
#இன்புளூயன்சா
# காய்ச்சல்
# மாசுப்பிரமணியன்
# சீல்