11.jpeg)
மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனம், இல்லங்கள், காப்பகங்கள் பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாவட்டத்தில் பல தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றோரை பராமரிப்பதற்காகவும், மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதற்காகவும் சேவை இல்லங்களை நடத்தி வருகின்றன. ஆதரவற்றோருக்கான இல்லங்களில் உடல் ரீதியான பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ பராமரிக்கப்பட்டு வந்தால், அத்தகைய இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், 2016ன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
இதனைப் போலவே மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகையான உதவிகளை வழங்கி அவர்களுக்கு சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிகளை நடத்தி வரும் நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு இதுவரை பதிவு செய்யாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களையும் விபரங்களையும் பெறலாம்.
மேலும், இதுதொடர்பாக 18004250111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைகளை செய்து வரும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மீது மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன் படி சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
#மாற்றுத்திறனாளிஇல்லம்
# காப்பகம்
# கலெக்டர்
# அமிர்தஜோதி