15.jpeg)
மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணங்களை அறிய வரும் அதிகாரிகளுடன் பெற்றோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றது. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தெரியவந்துள்ளது.
தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் +2 பொதுத் தேர்வு மொழித்தாளை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்ர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்; பிளஸ் டூ தேர்வில் 5.6 சதவீத மாணவர்கள் மொழித் தேர்வை எழுதவில்லை.
தேர்வு எழுதாத 50,000 மாணவர்களில் 38,000 பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆவர். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,500 பேரும் தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேரும் தேர்வு எழுதவில்லை. மாணவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டியுள்ளது. மொழித் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகள் எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைக்காக பெற்றோர் இடம்பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாதது தெரிய வந்தது. அச்சம் காரணமாக தேர்வுக்கு வரமுடியாத மாணவர்களையும் அடையாளம் கண்டு அச்சம் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்கும் வகையில் பெற்றோர் ஒத்துழைப்பு கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் அதிக மாணவர்கள் தேர்வு எழுதாதது தெரிய வந்தது. கொரோனாவுக்கு பிறகு மாணவர்கள் நடத்தையில் ஏற்பட்ட மாற்றமும் தேர்வு எழுதாதற்கு காரணமாக உள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதாததற்கான காரணங்களை அறிய வரும் அதிகாரிகளுடன் பெற்றோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மொழிப்பாடத் தேர்வை எழுதாத மாணவர்களை பிற தேர்வுகளை எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அதற்கான காரணத்தை அறிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.
Tags:
#மாணவர்கள்
# தேர்வு