இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
By: TeamParivu Posted On: March 23, 2023 View: 24

இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேரை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை என்று குறிப்பிட்டுள்ளார். 2023-ல் தற்போது வரை 28 தமிழ்நாடு மீனவர்களும், 4 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (23-3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 28 மீனவர்களும், 4 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் நமது மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பல கண்டனக் கடிதங்களை அனுப்பியும் இதுபோன்ற சம்பங்கள் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையிலும், இந்திய மீனவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் அடிக்கடி நடைபெற்று வருவதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர், இது தொடர்பாக உறுதியான மற்றும் காலவரையறைக்குட்பட்ட ஒரு திட்டத்தினை உடனடியாக வகுத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மீன்பிடித் தொழிலை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களும், அவர்களது படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், மீனவ சமூகத்தினரிடையே கடும் மனவேதனையும் மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 104 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையால் விடுவிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளும் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், 16 இந்திய மீனவர்கள் ஏற்கனவே இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் தலையிட்டு, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:
#இலங்கைசிறை  # மீனவர்கள்  # பிரதமர்  # முதல்வர்  # முகஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..