அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து வந்தவர்கள் கடலூர் காப்பகத்தில் இருந்து 5 பேர் ஓட்டம்..!!

அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து வந்தவர்கள் கடலூர் காப்பகத்தில் இருந்து 5 பேர் ஓட்டம்..!!
By: TeamParivu Posted On: March 24, 2023 View: 27

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில், சிபிசிஐடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். அங்கு இருந்த 33 பெண்கள் உட்பட 142 பேர் மற்றும் கோட்டக்குப்பத்தில் இயங்கி வந்த கிளை காப்பகத்தில் 25 பேர் என மொத்தம் 167 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நலம் தேறியவர்கள், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வரும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கடலூர் புதுப்பாளையத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் இயங்கி வரும் மனநல காப்பகம் மற்றும் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் இயங்கி வரும் மனநல காப்பகம் ஆகிய இடங்களில் 23 பேர் தங்க வைக்கப்பட்டனர். கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு, நேற்றுமுன்தினம் இரவு உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு அனைவரும் உறங்க சென்றனர். இதே போல காப்பகத்தின் காவலாளிகளும் தனி அறையில் சென்று உறங்கினர். இதன் பிறகு நேற்று அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, காப்பகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் உள்ளே சென்று பார்த்த போது, குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த, திருவள்ளூரை சேர்ந்த சேதுராமன் (34), கிருஷ்ணகிரியை சேர்ந்த அஸ்லாம் (44), கொல்கத்தாவை சேர்ந்த சோனா மகதூர் (28), கேரளாவை சேர்ந்த பிஸ்மில்லா (35), திருநெல்வேலியை சேர்ந்த மனோஜ் (25) ஆகியோரை காணவில்லை என்பதும், அவர்கள் கதவை உடைத்து, அவர்கள் உபயோகப்படுத்தும் போர்வைகளை ஒன்றோடு ஒன்றாக கட்டி, முதல் தளத்திலிருந்து கீழே இறங்கி தப்பி சென்றதும் தெரியவந்தது. இது குறித்து தொண்டு நிறுவன காவலாளிகள், கடலூர் தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். தப்பி ஓடிய 5 பேரின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
#அன்புஜோதிஆஷ்ரம்  # காப்பகம்  # கடலூர்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..