தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்..!!

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை:  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்..!!
By: No Source Posted On: March 24, 2023 View: 27

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.03.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் - 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை ஆகியவற்றை வெளியிட்டார்.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் 2023

இந்த மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில், மாநிலம் சந்தித்து வரும் பேரிடர்கள், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில செயல்பாட்டு குழு, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் பல்துறைகளின் பங்கு, இதர துறைகள் மற்றும் பங்கேற்பாளர்கள் குறித்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று, நிலச்சரிவுகள், பூகம்பம், இரசாயன தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள், அணுமின் நிலையங்கள், கதிர் வீச்சுகள் போன்ற பல்வகை பேரிடர்களை கையாளுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்தும், மாநிலத்தில், பல்வேறு வகையான பேரழிவுகளால் பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் மூலம் பேரிடர் தணிப்பு மற்றும் பருவகால மாற்றங்களின் சீற்றத்தணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியதின் அவசியம், அதற்கான சாத்தியக்கூறுகள், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கொள்கைகள், திட்டமிடுதல், நிதி ஒதுக்கீடு, துறைகள் வாரியான பேரிடர் தணிப்பு சாத்தியக்கூறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், குழுந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோருக்கு பேரிடர் காலங்களில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்தும், பல்வேறு துறைகளின் பொறுப்பு மற்றும் பங்களிப்பு குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. 

பேரிடர் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஊடக மேலாண்மை குறித்தும், பேரிடர் மீட்பு மற்றும் மறுசீரமைப்பில் முன்னர் இருந்ததை விட தரமான, சிறப்பான கட்டமைப்புகளை உருவாக்குதல் (Build Back Better) குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை : 

ஒரு வலுவான பேரிடர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் அனைத்து வகை பேரிடர்களின் எதிர்மறையான விளைவுகளை குறைத்து, உயிரிழப்பு, பொது சொத்துக்கள் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகளின் சேதம் ஆகிவற்றை தவிர்த்தல், அரசு உருவாக்கிய பொருளாதார மற்றும் வளர்ச்சி ஆதாயங்களை இழக்காது இருத்தல் என்பதே மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கையின் நோக்கமாகும். தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கை, பல்வகை பேரிடர்களுக்கான எச்சரிக்கை அமைப்பு, ஆபத்து, பேரிடர் பாதிப்புகளின் மதிப்பீடு மற்றும் அபாயம் குறித்த பகுப்பாய்வு, பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைத்துத் துறைகளால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களில்,

பேரிடர் அபாயக் குறைப்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இணைந்து செயல்படுத்துதல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துகிறது. மேலும், பேரிடர்களால் ஏற்படும் இறப்பு, பாதிப்பிற்குள்ளாபவர்களின் எண்ணிக்கை, நலிந்த பிரிவருக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அடிப்படை சேவைகளின் பாதிப்பு, பொருளாதார இழப்பு ஆகியவற்றை குறைப்பதற்கு இக்கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது. பேரிடர் அபாயக் குறைப்பிற்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் இந்தக் கொள்கை, பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான உலகளாவிய மற்றும் தேசிய கட்டமைப்பின் அடிப்படையிலும், மாநிலத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் எஸ். ஏ. ராமன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:
#தமிழ்நாடு  # கொள்கை  # பேரிடர்மேலாண்மைதிட்டம்  # முதல்வர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..