'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!

'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
By: TeamParivu Posted On: May 21, 2022 View: 153

இந்தியில் தேசிய விருது பெற்ற ‛ஆர்ட்டிக்கல் 15’ படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. கொலை செய்யப்பட்டு தற்கொலையாக மாற்றப்படும் இரு பெண்களின் மரணம் தான் படத்தின் கரு. அதை தமிழக அரசியலுக்கு ஏற்றபடி கலவை செய்து, கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி டைட்டிலோடு, உதயநிதி நடித்து வெளியாகியிருக்கிறது நெஞ்சுக்கு நீதி.

தி.மு.கவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தனி ஆளுமை செலுத்திய முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய அவரது சுயசரிதை நுாலான `நெஞ்சுக்கு நீதி' புத்தகம் தி.மு.கவின் பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதை இன்றைக்கு உள்ள தி.மு.க வினர் எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது. அதேநேரம் கருணாநிதியின் பேரன் உதயநிதி நடிகராக நடத்து வெளிவந்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைபடத்தைப் பார்க்க தீவிர ஆர்வம் காட்டிவருகிறார்கள் உடன்பிறப்புகள். கட்சியின் தொண்டர்களுக்கும் டிக்கெட் எடுத்துக்கொடுத்து பார்க்க வைக்கும் பணியை சிறப்பாக செய்துவருகிறார்கள் மாண்புமிகு அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களும். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும், தி.மு.கவின் இளைஞர் அணிச் செயலாளராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். அதோடு கடந்த பத்து ஆண்டுகளாகத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் என்கிற அடையாளத்தையும் தன்னுடம் இணைத்துக்கொண்டவர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, அவரது நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படமாக நெஞ்சுக்கு நீதி அமைந்துள்ளது. ஏற்கெனவே ஹிந்தியில் வெளியான Article 15 திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். தமிழகத்தில் மே 20 தேதியான இன்று இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை, அம்பேக்கார்-பெரியார் சிலைகள், போட்டோக்களுடன்  அவர்களின் வரிகள் தான் டயலாக்காக வலம் வருகிறது. ஒருதரப்பினர் சுமக்கும் வலிகளை, வரி வரியாக விவரித்திருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் தொடங்கி, பொள்ளாச்சியில் ஆரம்பிக்கும் கதை. 

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மாயமாகிறார்கள். இருவர் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள். ஒரு பெண் , என்ன ஆனார் என தெரியவில்லை. அதை சாதாரண பெட்டி கேஸ் போல, அந்த வழக்கை கையாளும் காவலர்களுக்கு மத்தியில், புதிதாக அங்கு பொறுப்பேற்கும் ஏஎஸ்பி., உதயநிதி, உணர்வோடு அதை விசாரிக்கிறார். தூக்கிலிடப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்ததா? மாயமான பெண் கிடைத்தாரா? என்பது தான், நெஞ்சுக்கு நீதி. 

மனிதன் படத்திற்குப் பின் உதயநிதிக்கு நல்ல ஸ்கோப் கிடைக்கும் படம்; சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி. இந்திக்கு எதிரான வசனங்கள், கடந்த கால ஆட்சி, அமைச்சரின் மச்சான் என தேவைப்படும் இடத்தில் எல்லாம், உதயநிதிக்கான வசனத்தை வைத்ததில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் அருண்குமார் காமராஜ். 

போலீஸ் மிடுக்கு கொஞ்சமும் குறையாமல், நன்கு தேறியிருக்கிறார் உதயநிதி. முந்தைய கால அவரது படங்களில் இருந்த பல குறைகள் நீங்கியிருக்கின்றன. ஆரி, புரட்சியாளராக சிறிது நேரம் வந்தாலும், குமரன் என்கிற பெயரை, படத்தில் பதிவு செய்திருக்கிறார். படத்தை பெரிதாக சுமந்ததில், சுரேஷ் சக்கரவர்த்திக்கு பெரும் பங்கு உண்டு. அதே அளவு பங்கு , இசையமைப்பாளர் திபு நினன் தாமஸிற்கு உண்டு. படத்தின் கதைக்குள் நம்மை அழைத்து செல்வது, அந்த பின்னணி தான். படம் முழுக்கவே விளையாடியிருக்கிறார் திபு. தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, கண் கொள்ளா காட்சிகளையும், கண்ணால் காண முடியாத காட்சிகளையும் அப்படியே காட்டுகிறது. 

அரசியல்வாதிகள் பார்க்கும் ஜாதியையும், ஜாதியை வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்களையும் சாடியிருக்கிறார்கள்; அதற்காகவே உதயநிதியை பாராட்டலாம். எந்த சமரசமும் இல்லாமல், துணிந்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; கதையில் உதயநிதி இருக்கும் போது, அதை சமாளிக்க மாட்டார்களா என்ன? படத்திற்கும், கதைக்கும் கவசமே உதயநிதி தான். திமுகவின் அடுத்த அரசியல் பயணத்திற்கும், திமுகவின் இமேஜ்ஜிற்கும் இந்த படம் உதவலாம். நெஞ்சுக்கு நீதி... ‛பன்ச்’க்கு உதயநிதி!

Tags:
#நெஞ்சுக்கு நீதி விமர்சனம்  # உதயநிதி ஸ்டாலின்  # தன்யா  # ஆர்டிகிள் 15  # தமிழ் ரீமேக் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..