சிறுபான்மை மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை ரத்து; அரசியல் கட்சி தலைவர்கள் பாஜ அரசுக்கு கண்டனம்..!

சிறுபான்மை மாணவர்களுக்கான ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை ரத்து; அரசியல் கட்சி தலைவர்கள் பாஜ அரசுக்கு கண்டனம்..!
By: TeamParivu Posted On: November 29, 2022 View: 37

அனைத்து மாநிலங்களிலும் உள்ள சிறுபான்மை பிரிவை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் மெட்ரிக்குலேஷன் படிப்பில் சேர்வதற்கு முன்கல்வி உதவித் தொகை (1 முதல் 10ம் வகுப்பு வரை) ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. கடந்த 2011ம்  ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 1 லட்சத்து 12,419 பேருக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது. இவர்களில் முஸ்லிம்கள் 54,259, கிறிஸ்தவர்கள் 56,682, சீக்கியர் 187, புத்தமதத்தினர் 144, ஜெயின்ஸ் 1145, பார்சி 2 பேர் அடங்குவர்.  இதன்படி இந்த  ஆண்டுக்கான முன்கல்வி உதவித் தொகை பெற விரும்புவோர் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஒன்றிய அரசு அறிவித்தது. 

தமிழகத்தில் இருந்து பல ஆயிரம் பேர் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும்  மாணவ மாணவியருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு உதவித் தொகையை நிறுத்திவிட்டு 9, 10ம் வகுப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.  அத்துடன் இந்த ஆண்டுக்கான உதவித் தொகை பெற அனுப்பிய விண்ணப்பங்களையும் ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இது சிறுபான்மை பிரிவு மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கண்ட உதவித் தொகை மாணவர்களுக்கு வழங்கப்படுவதன் மூலம் அந்த மாணவர்களை பள்ளிகளுக்கு பெற்றோர் அனுப்பி வைக்க வேண்டும் என்ற ேநாக்கத்தில் தான் இது வழங்கப்படுகிறது. கல்வி மூலம் அதிகாரப்படுத்துதல் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் என்று ஒன்றிய அரசின் சிறுபான்மை துறை அறிவித்துள்ளது. சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த ஏழை எளிய அடித்தள மாணவர்களின் பொருளாதாரம் சமூக கல்வி தளங்களில் பின்தங்கியுள்ளனர். 

அதற்கு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வும், பாரபட்சங்களும் காரணம். அதனால் இந்த திட்டங்கள் அந்த மக்களின் வாழ்நிலை குறித்த ஆழமான ஆய்வுகளின் பின்புலத்தில் கொண்டுவரப்பட்டன. சச்சார் குழுவும் அதற்கான ஆதரவாக அமைந்தது. இந்நிலையில், இலவச திட்டங்கள் என்பது அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் அவை இல்லை. அதனால் அரசுதான் அந்த மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதனால் 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ளதை காரணமாக வைத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை ரத்து செய்வது ஏழை எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் கல்வி உரிமை சட்டத்தின் இலக்கை எட்டவிடாமல் தோற்கடிக்க செயலாகும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் ஒன்றிய அரசுக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

Tags:
#சிறுபான்மை  # உதவித்தொகை  # கல்வி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..