
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில், எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம், என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தொழில் வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியின் மூலம் மேம்படுத்துவதிலும், அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதிகொண்டுள்ள தமிழ்நாடு அரசு, சுய தொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி, எஸ்டி) தொழில் முனைவோர்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யோக சிறப்பு திட்டமாக ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில்முனைவோர்களுக்கு உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த அனைத்து வித தொழில் திட்டத்திற்கும் மற்றும் வணிக விரிவாக்கத்திற்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை. கல்வி தகுதியும் தேவையில்லை.
மொத்த திட்ட மதிப்பில் 65% வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35% அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளிகளுக்கு தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. மேலும், இத்திட்டத்தில் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழிகாட்டுதல், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான அனைத்து வித உதவிகளும் அளிக்கப்படுவதுடன் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் திட்டம் சார்ந்த சிறப்பு பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
நிதியுதவி மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாக தொழில் வணிக மண்டல இணை இயக்குநர் அலுவலகம் செயல்படும். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் இன்று (23ம் தேதி) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற ஏ-30, சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் அமைந்த தொழில் மற்றும் வணிக மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 90030 84478, 94441 14723 ஆகிய எண்களில் தொலைபேசி வழியாகவோ அணுகலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
#
Tags:
#அண்ணல்அம்பேத்கர்
# தொழில்முன்னோடிகள்திட்டம்
# கலெக்டர்
# அமிர்தஜோதி