
10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் இன்று முதல் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் அரசு சேவை மையங்களிலும் தேர்வு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற விரும்புவர்கள் மே 24 முதல் மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம், துணைத்தேர்வுக்கான விரிவான கால அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
06.04.2023 முதல் 20.04.2023 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 19.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக ( SMS) அனுப்பப்பட்டது.
* தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
26.05.2023 அன்று பிற்பகல் 12.00 முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
* மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Re – Totalling) விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 24.05.2023 அன்று பிற்பகல் 12.00 முதல் 27.05.2023 மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
* மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை:
தேர்ச்சி பெறாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும் என்று தெரிவித்துள்ளனர். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி தேர்வர்கள் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால்டிக்கெட் வெளியிடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Tags:
#பொதுத்தேர்வு
# தேர்வுத்துறை
# மாணவர்கள்