எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 120 கட்டிடங்கள் அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை..!!

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 120 கட்டிடங்கள் அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை..!!
By: TeamParivu Posted On: May 24, 2023 View: 41

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 120 கட்டிடங்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டிடம், கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகளை கடந்தும் எழில்மிகு தோற்றத்துடன் விளங்குகிறது. தெற்கு ரயில்வேயில் 2வது பெரிய ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் 562 ரயில்கள் கையாளப்படுகின்றன. முக்கியமான நேரங்களில் ஒரே நேரத்தில் 24,600 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் நிலையத்தை உலகத்தரத்தில் மேம்படுத்த தெற்கு ரயில்வே தரப்பில் முன்மொழியப்பட்டது. இதை ஏற்று, ரூ.734 கோடியே 91 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதற்கான பணிகளை கடந்த ஆண்டு இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து, ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு இதற்கான டெண்டர் விடப்பட்டது. இந்த மறு சீரமைப்பு பணிகளை 36 மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணிகளை மும்பையை சேர்ந்த டாடா பொறியாளர் ஆலோசனை நிறுவனம் கண்காணிக்கிறது. எழும்பூர் ரயில் நிலையத்தின் பிரதான முகப்பு காந்தி இர்வின் சாலையிலும், பின்புறப் பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் முடிவடைகிறது. இந்த இரு பகுதியிலும் ரயில்வே விரிவாக்க மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. 1,35,406 சதுர மீட்டருக்கு ரயில் நிலையக் கட்டிடம் புதிதாக அமைய இருக்கிறது. இந்நிலையில், முதல் கட்டமாக ரயில் நிலையத்தை அளவீடு செய்து, காந்தி இர்வின் சாலை அருகே உள்ள ரயில்வே குடியிருப்புகள், பின்புறம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான குடியிருப்புகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ரயில்வே கட்டிட சிவில் இன்ஜினியர் ஒருவர் கூறுகையில், ‘‘மறுசீரமைப்பு பணிக்காக வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காந்தி இர்வின் சாலையில் அதிகாரிகள், ஊழியர்கள் என 45 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்தகட்டமாக மற்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தவுடன் உடனடியாக கட்டிட பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான பூமி பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. பயணிகள் வருகை, புறப்பட்டு செல்வதற்கான தனி இடமும், நடை மேம்பாலம், காத்திருப்பு அறை, வாகன நிறுத்தங்கள், நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாக அமைய உள்ளது. ரயில் நிலையத்தின் பழைய கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும். மல்டி பிளக்ஸ் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் தற்போதுள்ள ரயில்வே பார்சல் பகுதி ரயில்வே கட்டிடமாகவும் மாற்றப்படுகிறது. எதிர் காலங்களில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் தடையின்றி பயணிகள் வந்து செல்ல ஏற்பாடு, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி உள்பட விமான நிலையத்தை போல அனைத்து வசதிகளுடன் அமைய உள்ளது,’’ என்றார்.

3 நடை மேம்பாலம்
ரயில் நிலையத்தில் கார்கள், வாடகை கார்கள், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்க்ஷாக்கள் நிறுத்தும் வகையில் அடுக்கு பார்க்கிங் வசதிகள் அமைய உள்ளன. பயணிகள் தனித்தனி பகுதிகளில் இருந்து வந்து சேர 3 நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

பல்வேறு வசதிகள்
பொது மற்றும் தனியார் வாகனங்களில் வரும் பயணிகள் தங்குதடையின்றி ரயில் நிலையத்திற்கு சென்று வரும் வகையில் வெளி வளாகப்பகுதி அமைய இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து பயணிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள், குடிநீர் குழாய்கள், குளிர் குடிநீர் வசதி, மேற்கூரைகள், இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்பட இருக்கின்றன.

மல்டிலெவல் பார்க்கிங்
காந்தி இர்வின் சாலை பகுதியிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட இருக்கின்றன. பயணிகள் வருகை, புறப்பாடு ஆகியவற்றிற்கு தனித்தனியாக அரங்குகள், பார்சல்களை கையாள தனிப்பகுதி, நடைமேம்பாலங்கள், மல்டிலெவல் வாகன நிறுத்தங்கள் ஆகியவை அமைய இருக்கின்றன.

காத்திருப்பு அரங்கு
தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல மின் தூக்கி, எஸ்கலேட்டர் அமைய இருக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் இருப்பது போல பயணிகள் வருகை புறப்பாடு தனித்தனியாக பிரிக்கப்பட்டு, நடைமேடை காத்திருப்பு அரங்கு, வெளிப்புறப் பகுதி ஆகியவற்றிற்கு எளிதாக செல்லும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது.

Tags:
#எழும்பூர்ரயில்நிலையம்  # பூந்தமல்லி  # நெடுஞ்சாலை  # மறுசீரமைப்புபணி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..