
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கூட்டுறவு, வருவாய் போன்ற 13க்கும் மேற்பட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பலன்களை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் “க்ரெயின்ஸ்” இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘க்ரெயின்ஸ்’ இணையதளத்தில் பதிவு செய்யப்படும் மூன்று முக்கியமான இனங்கள் வருமாறு:
1. சாகுபடி நிலத்துடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் தனிப்பட்ட விவரம். 2. கிராமங்களில் உள்ள சாகுபடி நிலத்தில் நில உடைமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல். 3. சாகுபடி நிலத்தில் ஒவ்வொரு முறை சாகுபடி செய்யப்படும் பயிர்கள் பற்றிய விபரங்களை நிகழ்நிலை அடிப்படையில் நில உடைமை வாரியாக சேகரித்தல். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் காடுகள் என்ற இனங்களில் ஒவ்வொரு பருவத்திலும் என்னென்ன பயிர்கள், எவ்வளவு பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது என்பது பற்றிய விபரங்களை சர்வே எண் வாரியாக நிகழ்நிலை அடிப்படையில் பதிவு செய்திட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பணியினை எளிதாக மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கைபேசி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலங்கள் பற்றிய விபரங்களும் சர்வே எண், உட்பிரிவு வாரியாக ஏற்கெனவே புவியிடக்குறியீடு செய்யப்பட்டு, இச்செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, களப்பணியாளர்கள் சம்பந்தப்பட்ட உட்பிரிவில் உள்ள நிலத்திற்கு நேரடியாக சென்று, ஒவ்வொரு பருவத்திலும் சாகுபடி செய்யப்படும் நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள் போன்ற வேளாண் பயிர்களையும், பழங்கள், காய்கறிகள், மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களையும், தேக்கு, மகாகனி, செம்மரம் போன்ற மரப்பயிர்கள் பற்றிய விபரங்களையும் பயிர் வாரியாக எத்தனை ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்களையும் பதிவு செய்ய முடியும்.
பயிர், பரப்பு மட்டுமல்லாது, பயிரின் நிலை, வளர்ச்சி பற்றிய விபரங்களையும் புகைப்படம் வாயிலாக பதிவு செய்ய இயலும். இத்தகைய பதிவு முறைக்கு கட்டாயம் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சர்வே எண் உட்பிரிவு உள்ள வயலுக்கு நேரடியாகச் சென்றால் மட்டுமே பயிர் சாகுபடி பதிவேற்றம் செய்ய முடியும். வயலுக்கு செல்லாமலோ, சம்பந்தப்பட்ட சர்வே எண் அல்லாது மற்ற இடங்களில் நின்றோ பயிர் சாகுபடியினை பதிவிட இயலாது. இந்த செயலியினை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த பயிற்சி சென்னை, அண்ணா நிர்வாக மேலாண்மை பயிற்சி நிலையத்தில் கடந்த 22ம் தேதி அன்று நடைபெற்றது.
Tags:
#க்ரெயின்ஸ்
# இணையதளம்
# விவசாயிகள்
# சாகுபடி
# பயிர்களின்பரப்பு
# துறைஅதிகாரிகள்