தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
By: TeamParivu Posted On: May 25, 2023 View: 4

தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அமுல் நிறுவனம் இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய உள் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், பிற மாநிலங்களில் திறம்படச் செயல்படும் பால் கூட்டுறவு சங்கங்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் ஊரகப் பகுதிகளிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக 1981ம் ஆண்டு முதல், மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்பு திறம்பட செயல்பட்டு வருவதாகவும், ஆவின் நிறுவனம் தலைமைக் கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 இலட்சம் லிட்டர் பாலினை 4.5 இலட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ள, இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலைநிறுத்தவும், கால்நடைத் தீவனம், தீவனம், தாது உப்புக் கலவை, கால்நடை சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க சேவைகளையும், இடுபொருட்களையும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வருவதுடன், தரமான பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு மிகக்குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளர், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச் சத்தினைப் பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், வெண்மை புரட்சி என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் , அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடு, பல்லாண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அமுல் நிறுவனத்தின் இத்தகைய செயல், பால் மற்றும் பால் பொருட்களைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கிவிடும் என்று தெரிவித்துள்ளர்

Tags:
#அமுல்நிறுவனம்  # பால்கொள்முதல்  # அமித்ஷா  # முதலமைச்சர்  # முகஸ்டாலின்  # கடிதம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..