
மேற்கு வங்களாத்தில் உள்ள கூலித்தொழிலாளியின் வங்கி கணக்கில் திடீரென 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதை அடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பாசுதேவ்பூரில் வசிப்பவர் நசிருல்லா மண்டல். கூலித் தொழிலாளியான இவரது வீட்டிற்கு சைபர் செல் அதிகாரிகள் சிலர் ஒரு நோட்டீசுடன் சென்றுள்ளனர். அவரிடம் அந்த நோட்டீசைக் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர். அந்த நோட்டீசில் அவரின் வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது எப்படி என விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
குழம்பிப் போன அந்த கூலித்தொழிலாளி தனது வங்கி கணக்கில் வெறும் 17 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரது வங்கி கணக்கை சரிபார்க்குமாறு கூறியுள்ளனர். வங்கி கணக்கை திறந்து பார்த்த மண்டலுக்கு மயக்கமே வந்து விட்டது. ஆம், உண்மையிலேயே அவரது வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
திடீரென அவரின் கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் கணக்கு வைத்திருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைக்கு ஓடிச் சென்று இந்தப் பரிவர்த்தனையைப் பற்றி விசாரித்திருக்கிறார். அப்போது அவரது கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முடக்கப்படுவதற்கு முன், அவர் கணக்கில் 17 ரூபாய் மட்டுமே இருந்தது. இருப்பினும், கூகுள் பே மூலம் அவரது கணக்கைச் சரிபார்த்தபோது, அதில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 7 இலக்கங்களில் காட்டப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் தன் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் திண்டாடுகிறார் நசிருல்லா மண்டல். போலீஸ் தன்னைப் பிடித்துக் சென்று விடுவார்களோ என்ற பயத்தில் நாள் முழுக்கக் கலக்கத்தில் இருக்கிறார் அந்த கூலித் தொழிலாளி.
இந்த விவகாரத்தில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதால் எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது என வங்கி அதிகாரிகள் மண்டலிடம் தெரிவித்துள்ளனர். இந்த 100 கோடி ரூபாய் பணம் கூலித்தொழிலாளி வங்கி கணக்கில் எப்படி வந்தது மற்றும் அது யாருடைய பணம் என்பதை பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags:
#கூலித்தொழிலாளி
# 100கோடி