
தி சென்னை புரசைவாக்கம் இந்து ஜனோபகார சாஸ்வத நிதி
சென்னை மக்களில் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும் இந்த நிதி நிறுவனம் 1882 ஆண்டு துவங்கப்பட்டு இப்போது 140 வருடமாகிறது.
பொதுமக்களிடம் டெப்பாசிட் பெற்று நகைக்கடன் மற்றும் வீடுகளின் பேரில் கடன்கள் வழங்குவது இந்த நிதி நிறுவனத்தின் செயல்பாடுகளாக இருந்தன. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை விட ஒன்னறை முதல் இரண்டு சதவிகிதம் வரை வட்டியில் வித்தியாசம் இருக்கும் என்பதாலும் 140 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதாலும் பொதுமக்களில் பெரும்பாலோர் இங்கு தங்களது சேமிப்புகளை முதலுடு செய்திருந்தனர். குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றி பென்சன் வாய்ப்பு இல்லாத ஓய்வு பெற்ற முதியோர்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து கிடைத்த வட்டியை கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி கடந்த 03/04/2022 முதல் இந்த நிதி நிறுவனத்தை மூடிவிட்டனர். மூன்று மாத காலமாக முதியோர்களும் பெண்களும் நிதி நிறுவன வாயிலில் கூடி வருத்தத்துடன் கலைந்து செல்வதுமாக இருப்பது காண்போரின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருக்கிறது.
முதியோர்கள் அவர்களின் வாழ்வாதாரமே மிகவும் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்களின் மருத்துவ தேவைகளை சமாளிப்பதற்கு கூட பணமின்றி தவிப்பதாக கண்ணீர் விட்டு கதறுவது வேதனையின் உச்சம்.
இந்த நிலைமையினை பார்த்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிலேயே இருபது பேர் இணைந்து பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஒன்றை துவங்கி அந்த சங்கத்தின் மூலமாக சட்டபோராட்டங்களை தொடர்ந்து நடத்திவருகின்றனர். தமிழக முதல்வர் நிதி அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் தமிழக காவல் துறை தலைமை இயக்குனர் ரிசர்வ் வங்கி, கம்பெனிகளின் பதிவுத்துறை அலுவலர் என ஒன்று விடாமல் அனைவருக்கும் புகார் மனுக்களை நலச்சங்கத்தின் சார்பாக அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் தனித்தனியே சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் நேரிலேயே தங்கள் வேதனையை கடிதத்தில் வடித்து கொடுத்துள்ளனர் இவ்வாறு சுமார் 1500 க்கு மேற்பட்டோர் புகார் மனுவை பொருளாதார குற்றப்பிரிவில் அளித்துள்ளனர். நிர்வாகத்தின் தரப்பிலோ மொத்தம் 3000 டெப்பாசிட்தாரர்களிடமிருந்து 108 கோடிக்கு மேல் டெப்பாசிட் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் எதனால் திடீரென நிதி நிறுவனத்தை மூடினார்கள் என்பதற்கு சரியான பதில் தரவில்லை.
காவல்துறை தரப்பிலோ நடவடிக்கை எடுப்போம் என சொல்லி காலம் கழித்து வருகின்றனர்.
எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்,தங்கள் வேதனை எப்போது தீரும் என கலங்கி புலம்புகின்றனர்.
காவல்துறையோ அரசோ யாராவது இவர்களின் பிரச்சினையை தீர்த்து அவர்களின் முகத்தில் புன்னகையை வர வைக்க மாட்டார்களா என்பதே இந்த அவலத்தை தினமும் காண்போரின் எதிர்பார்பாக உள்ளது.