குடிநீர், கழிவுநீர் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண சென்னை குடிநீர் வாரியத்தில் 8 வழிகளில் புகார் செய்யலாம்; புதிய திட்டம் அறிமுகம்..!!

குடிநீர், கழிவுநீர் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண சென்னை குடிநீர் வாரியத்தில் 8 வழிகளில் புகார் செய்யலாம்; புதிய திட்டம் அறிமுகம்..!!
By: TeamParivu Posted On: October 28, 2022 View: 50

சென்னை மக்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீரை வழங்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் செய்து வருகிறது. பல்வேறு குடிநீர் ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் குடிநீரை தேவையான அளவு பகிர்ந்து அளித்து வருகிறது. மேலும் சென்னையில் கழிவுநீரை அகற்றும் பணியையும் செய்து வருகிறது. இதற்கான சேவைகளில் நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய குறைகளுக்கு தீர்வு காணவும், வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தவும் நுகர்வோர்களிடம் இருந்து புகார்கள் பெறும் வசதிகளை செய்துள்ளது. 

இதன் மூலம் புகார்தாரர்களுக்கு உடனுக்குடன் பதில் தருவதுடன், அவர்களின் பிரச்னைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 

இதற்காக பல்வேறு விதிமுறைகளை வகுத்து புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அதன்படி, 24 மணி நேர புகார் பிரிவு செயல்படுகிறது. மேலும், இணைய வழி புகார்களை கண்காணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதவிர மின்னஞ்சல் புகார்கள், குறைதீர்க்கும் கூட்டங்கள், குறைதீர்க்கும் பணியில் கைபேசி செயலி அறிமுகம், தேசிய உதவி எண் ‘14420’,கட்டணமில்லா  எண் ‘1916’,24 மணி நேர புகார் பிரிவு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த திட்டங்கள் மூலம் நுகர்வோர்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கிறது. சென்னைக் குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள புகார் பிரிவில் 24 மணி நேரமும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு அவைகள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பணிமனைப் பொறியாளர்களுக்கு அலைபேசி மூலமாக அனுப்பப்படுகின்றது. 

வலைதளம் சார்ந்த இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டு நுகர்வோரிடமிருந்து கணினி வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் புகார்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. புகார்கள் பெறப்பட்ட பிறகு, ஒரு பிரத்யேக புகார் எண் தாமாக உருவாக்கப்பட்டு உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலமாக நுகர்வோருக்கும், பணிமணை பொறியாளருக்கும் அனுப்பப்படுகிறது. நுகர்வோர் தங்களது புகார்களை எவ்வித தடையுமின்றி பதிவு செய்வதற்காக புகார் பிரிவில் தொலைபேசி எண்கள் 044- 45674567, 14420, 1916 (கட்டணமில்லா எண்) 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. புகார்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகம், பணிமனை அலுவலகம், முதுநிலை கணக்கு அலுவலருக்கும் கணினி மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

கைபேசி பயன்பாட்டின் மூலமாக புகார்களை பதிவு செய்யும் வசதியும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதால், புகாரில் தெரிவிக்கப்பட்ட பிரச்சனையின் சரியான கோணம் மற்றும் இடத்தை துல்லியமாக அடையாளம் காணவும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இணைய வழி புகார்கள் கண்காணிக்கும் திட்டமானது, புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண்பதற்காக சென்னைக் குடிநீர் வாரியத்தில் ஒரு இணைய தள அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் தங்களது குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றலின் இயக்கம் மற்றும் பராமரிப்பு, வரி, கட்டணம் மற்றும் இதர குறைகளுக்கான புகார்களை வாரியத்தின் இணையதளமான https://chennaimetrowater.tn.gov.in ன் மூலம் பதிவு செய்யலாம்.

 பதிவு செய்யப்பட்ட புகார் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக புகாரின் விவரம் அதிகபட்சம் 3 நிமிடங்களுக்குள்ளாக சம்பந்தப்பட்ட பணிமனை பொறியாளருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். புகார்களை கால வரம்பிற்குள் முறையாக சரி செய்யாவிடில் உயர் அலுவலருக்கு இந்த சரி செய்யப்படாத புகார் தானாக அனுப்பிவைக்கப்படும் வசதியும் உள்ளது.

மேலும், சென்னை குடிநீர் வாரிய இணையதளத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளது. கள அதிகாரிகளின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலமாக பதில் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, பொதுமக்களுடைய குறைகளை நேரடியாக கேட்கும் விதமாக குறை தீர்க்கும் கூட்டங்கள் எல்லா மாதங்களிலும் இரண்டாவது சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 15 பகுதி அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறது. அங்கு பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது. குறைதீர்க்கும் பணியில் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நுகர்வோர்கள் தங்கள் குறைகளை வாரிய அதிகாரிகளுக்கு எந்த நேரத்திலும் விரைவாகவும், வசதியாகவும் கைபேசி மூலம் தெரிவிக்கலாம். 

நுகர்வோர்கள் தங்களது குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நிலவரத்தை அவ்வப்போது தெரிந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது. இவ்வாறு சென்னை குடிநீர் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் நுகர்வோர்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண முழு அளவில் உதவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:
#குடிநீர்  # கழிவுநீர்  # நுகர்வோர்  # சென்னை குடிநீர் வாரியம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..