உலகிலேயே முதல்முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் ஆபரேஷன்...!!

உலகிலேயே முதல்முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் ஆபரேஷன்...!!
By: TeamParivu Posted On: May 05, 2023 View: 79

பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகிலேயே முதன்முறையாக தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். எப்படி இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. என்னென்ன சவால்களை மருத்துவர்கள் சந்தித்தனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

அமெரிக்காவின் பாஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லெனாக்ஸ் - லீட்டா தம்பதியர். இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அடுத்தடுத்து 2 முறை லீட்டாவுக்கு கரு கலைந்து போனது. இந்த சூழலில்தான், சில மாதங்களுக்கு முன்பு லீட்டா கர்ப்பம் தரித்துள்ளார். இதற்கு முன்பு 2 முறையும் மூன்று மாதங்களுக்கு முன்பே அவருக்கு கரு கலைந்திருக்கிறது.

ஆனால், இந்த முறை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கரு வளர்ந்திருக்கிறது. இதனால் அந்த தம்பதியர் மகிழ்ச்சியில் திளைத்தனர். எனினும், அவர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு 7-வது மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக லீட்டா சென்றுள்ளார். அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், குழந்தையின் மூளையில் உள்ள ரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாததை கண்டறிந்தனர்.

அந்த ரத்த நாளத்தின் மூலமாகவே மூளையில் இருந்து இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்லப்படுகிறது. அது முறையாக வளர்ச்சி அடையாததால் அதிக அளவிலான ரத்தம் குழந்தையின் இதயத்துக்கு சென்று கொண்டிருந்தது. இது தொடர்ந்தால், கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு லெனாக்ஸ் - லீட்டா தம்பதியர் வெடித்து அழுதனர். தவமிருந்து உண்டான இந்தக் குழந்தையும் நம்மை விட்டு போகப்போகிறதே என அவர்கள் துடிதுடித்தனர்.

இவர்களின் சோகத்தை கண்ட மருத்துவர்கள், கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். ஆனால் இதில் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இதுகுறித்து தம்பதியருக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டாலும் குழந்தை இறக்கதான் போகிறது. அறுவை சிகிச்சை செய்தாலாவது குழந்தை பிழைக்க வாய்ப்புள்ளதே என எண்ணிய அவர்கள், இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி, கடந்த வாரம் லீட்டாவை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அவரது வயிற்றில் துளையிட்ட மருத்துவர்கள், ஒரு ஊசி போன்ற கருவியின் மூலமாக கருவில் இருக்கும் குழந்தையின் தலையிலும் துளையிட்டனர். அதில் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். குழந்தையின் தலை மிகவும் மிருதுவாக இருப்பதால் எளிதாக துளையிட்ட மருத்துவர்கள், ஒரு பெரிய எலுமிச்சை பழத்தின் அளவில் இருந்த குழந்தையின் மூளையை சென்றடைந்தனர். அதன் பின்னர் ஒரு எலக்ட்ரிக் காயில் (coil) போன்ற சிறிய கருவியை ஊசி மூலமாக எடுத்துச் சென்று, குழந்தையின் மூளை ரத்த நாளத்தில் வெற்றிகரமாக மருத்துவர்கள் பொருத்தினர்.

ஊசியில் உள்ள கேமரா கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருப்பதால் கம்ப்யூட்டரை பார்த்தபடியே மருத்துர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்கள். ரத்த நாளத்தில் அந்தக் கருவி பொருத்தப்பட்ட உடனேயே இதயத்துக்கு செல்ல ரத்தத்தின் அளவு குறைந்து, சரியான விகிதத்தில் செல்ல ஆரம்பித்தது. இதனால் குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இனி சாதாரண குழந்தையை போலவே இந்த குழந்தையும் வளரும் என்றும், வாழ்நாள் முழுவதும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு டெல்லியில் உள்ள எய்மஸ் மருத்துவமனையில் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:
#குழந்தை  # அறுவைசிகிச்சை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..