அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்! "கொரோனா" முக்கிய காரணம்! மருத்துவர்கள் பகீர்! தடுக்க என்ன செய்யணும்

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்!
By: TeamParivu Posted On: September 30, 2023 View: 61

இன்று உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதய நோய்களும் இதய பாதிப்புகளும் திடீர் திடீரென அதிகரிக்கும் நிலையில், அதைத் தடுக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

மோசமான வாழ்க்கை முறை, கொரோனா உடலில் ஏற்பட்ட மாற்றங்கள், மன அழுத்தம் ஆகியவை இதயப் பிரச்சினைகளை அதிகரிக்கக் காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மூத்த இதய நோய் வல்லுநரான டாக்டர் ரஞ்சன் ஷர்மா கூறுகையில், "இதய நோய்கள் ஏன் ஏற்படுகின்றன.. அவற்றை எப்படித் தடுக்கலாம் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது" என்று அவர் தெரிவித்தார்.

இதய பாதிப்பு: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதய நோய் அடிக்கடி ஏற்படும் பாதிப்பாகவே இருக்கிறது. காலப்போக்கில், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களும் அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. நமது புவியியல் மற்றும் மரபணு காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும், அதிகரிக்கும் நகரமயமாக்கலும் இதற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனையும் ஏற்படுத்துகிறது. அதிகளவில் கலோரிக்களை எடுத்துக் கொள்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, மன அழுத்தம் ஆகியவை தான் 25 முதல் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் இதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. விழிப்புணர்வு: இது தொடர்பாக டாக்டர் ரஞ்சன் ஷர்மா மேலும் கூறுகையில், "வளர்ந்த நாடுகளில் இது குறித்த விழிப்புணர்வு அதிகம். இதான் அவர்கள் முறையான உடற்பயிற்சியும் செய்வதால் இதய நோய்ப் பாதிப்பு குறைவாகவே உள்ளது. இதய பிரச்சனைகள், குறிப்பாக அரித்மியா போன்ற பாதிப்பு இப்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. இது அதிகரிக்கும் போது நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கக் கூடும். நாம் ஆரோக்கியமாக இருக்க விழிப்புணர்வும் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவும் தேவை.

உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யச் சிறு வயதிலேயே குழந்தைகளை ஓடி ஆடி விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமின்றி வேலை செய்யும் இடங்களிலும் தங்கள் பணியாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்துச் சொல்லித் தர வேண்டும். மன அழுத்தத்தைச் சமாளிப்பது, அதிக கலோரி உணவுகளைத் தவிர்ப்பது மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்வது உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார். அறிகுறிகள் அலட்சியம் செய்யாதீர்கள்: தொடக்க நிலையில் நாம் செய்யும் சிறு விஷயமும் கூட நமக்கு மிகப் பெரியளவில் உதவியாகவே இருக்கும். எனவே இதய பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம். அறிகுறிகளை அலட்சியம் செய்தால் அது நமக்கு அதுவே பேராபத்தில் சென்று முடியும்.

இது தொடர்பாக மூத்த இதய வல்லுநர் டாக்டர் சுவ்ரோ பானர்ஜி கூறுகையில், "நமது நாட்டில் தொற்று நோய் மீது தான் அதிக கவனம் இருக்கிறது. தொற்றாத அதாவது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவாத நோய்கள் குறித்து நமது நாட்டில் அதிக அக்கறை இல்லை. இந்த காலகட்டத்தில் ​​நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயப் பிரச்சனைகள் போன்ற தொற்றாத அதே நேரம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் இவை இரண்டுமே குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதை நாம் உடனடியாக சரி செய்ய வேண்டும்" என்றார்.

இளைஞர்கள் மத்தியில் இதய நோய்கள் அதிகரிப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "இளைஞர்களுக்கு கொரோனா காரணமாக இதய தமனிகள் தடிமனாகும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தமனிகளை கடினமாக்கியுள்ள நிலையில், அது ரத்தம் உறைதலை ஏற்படுத்தும் பாதிப்பு இருக்கிறது. இது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியில் ஏற்படும் பாதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இதற்கு கொரோனா மட்டுமே ஒரு காரணம் எனச் சொல்ல முடியாது.. உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, மன அழுத்தம் மற்றும் துரித உணவு போன்ற இந்த காலத்து வாழ்க்கை முறையும் இதற்கு மற்றொரு பெரிய காரணமாகும் மன அழுத்தம் எப்போதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல நமக்குத் தூக்கமும் இன்றியமையாத ஒன்று.. ஆனால் தூங்கும் நேரமும் தொடர்ந்து குறைந்தே வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.


Tags:
##health# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..