கஷ்டப்படாமல் உடல் எடையைக் குறைக்கணுமா? அப்ப தினமும் காலை 11 மணிக்கு இந்த ஜூஸ்களை குடிங்க

கஷ்டப்படாமல் உடல் எடையைக் குறைக்கணுமா? அப்ப தினமும் காலை 11 மணிக்கு இந்த ஜூஸ்களை குடிங்க
By: TeamParivu Posted On: October 11, 2023 View: 184

உலகில் உடல் பருமனால் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி உடல் பருமனடைவதற்கு தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுகளும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணம். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஒருவரது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டும். உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், அந்நபர் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எனவே அதிகரித்த உடல் எடையை குறைக்க ஒவ்வொருவருமே கட்டாயம் முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் முதலில் பொறுமை அவசியம். அதோடு ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் பல்வேறு உணவுகள் நம்மைச் சுற்றியுள்ளன. அதில் ஒன்று தான் ஜூஸ்கள்.

சரியான ஜூஸ்களைத் தேர்ந்தெடுத்து ஒருவர் குடித்து வந்தால், உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுவும் நற்பதமான ஜூஸ்களில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகளவிலான கலோரிகளை எரிக்க உதவுகின்றன.

முக்கியமாக ஜூஸ்கள் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. அப்படிப்பட்ட ஜூஸ்களை ஒருவர் தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசமும் சிறப்பாக இருக்கும்.

எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் நிறைய பேர் காலை உணவிற்கு பின் பசியை உணரலாம். அப்போது பசியைத் தணிக்கும், அதே சமயம் உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் ஒருசில ஜூஸ்களைக் குடித்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம் அல்லவா? எனவே கீழே வேகமாக உடல் எடையைக் குறைக்க குடிக்க வேண்டிய சில ஜூஸ்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

கேரட் ஜூஸ் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கேரட் மிகவும் அற்புதமான உணவுப் பொருள். ஏனெனில் கேரட்டில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. எனவே கேரட் ஜூஸை குடிக்கும் போது, அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்து, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும். மேலும் கேரட் ஜூஸ் பித்த நீர் உற்பத்திக்கு உதவி புரிந்து, கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே ஈஸியான வழியில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், கேரட் ஜூஸை குடியுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ் புளிப்பு மற்றும் இனிப்புச் சுவையைக் கொண்ட ஆரஞ்சு பழம் ஒரு கலோரி குறைவான பழம். இந்த ஆரஞ்சு பழத்தில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து, எடை இழப்பிற்கு உதவி புரிகின்றன. ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர், ஆரஞ்சு ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பீட்ரூட் ஜூஸ் பொதுவாக பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகம் ஊறும் என்பார்கள். ஆனால் அந்த பீட்ரூட் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? ஏனெனில் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் கொழுப்புக்கள் ஏதும் இல்லை. பீட்ரூட்டைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், அதில் உள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான குடலியக்கத்தை தூண்டி, எடை இழப்புக்கு உதவி புரியும். அதற்கு பீட்ரூட் ஜூஸ் உடன் சிறிது எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

தர்பூசணி ஜூஸ் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணியை உட்கொண்டால், உடல் வறண்டு போகாமல் நீரேற்றத்துடன் இருக்கும். அப்படிப்பட்ட தர்பூசணியை உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் குடித்து வந்தால், உடற்பயிற்சியால் உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர் உடலுக்கு மீண்டும் கிடைத்து, உடல் நீரேற்றத்துடன் இருக்கும். அதே சமயம் அதில் உள்ள அமினோ அமிலத்தால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையும் குறையும்.

நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் புளிப்புச் சுவையைக் கொண்ட வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். தினமும் ஒரு நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால், பல நோய்களின் அபாயத்தைத் தடுக்கலாம். முக்கியமாக நெல்லிக்காய் ஜூஸை காலை உணவிற்கு பின் குடித்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி, கொழுப்புக்களை வேகமாக குறையும் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ளும். அதுவும் நெல்லிக்காய் ஜூஸ் உடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.


Tags:
##HEALTH# 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..