கிராமப்புற விளையாட்டு வீரர்கள் சாதனை படைக்க கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர்

கிராமப்புற விளையாட்டு வீரர்கள் சாதனை படைக்க கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர்
By: TeamParivu Posted On: February 01, 2024 View: 23

சென்னை: கிராமப்புற விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பதற்கு கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார்.
6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு, முதல் 3 இடங்களை பிடித்த மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியாணா மாநிலங்களுக்கு கோப்பைகளை வழங்கினர்.
மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் நிகழ்ச்சியில் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற 6-வது கேலோஇந்தியா விளையாட்டு போட்டி மிகவும்முக்கியத்துவம் வாய்ந்தது. தென்னிந்தியாவில் நடைபெறும் முதல் கேலோ இந்தியா போட்டி இதுதான். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 26 விளையாட்டு பிரிவுகளில் 4,454 இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் 2,307 வீரர்களும், 2,147வீராங்கனைகளும் என சமமான பங்கேற்பை அளித்துள்ளது பெருமை அளிக்கிறது.
நம் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக இளைஞர்கள் இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியின் போக்கை இளைஞர்கள்தான் வழிநடத்துகின்றனர். மேலும், தேசத்தின் யோசனைகளை வடிவமைத்து, எதிர்கால இந்தியாவை உருவாக்குகின்றனர். இளம் விளையாட்டு வீரர்கள் புதிய சாதனைகளை படைப்பதற்கும், ஒலிம்பிக்கில் தடம் பதிப்பதற்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, ஒரு களமாக மாறி உள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக, பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்த போதிலும், விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் காரணமாகவே அவர் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை இங்கு வந்து தொடங்கி வைத்தார்.
ஜனவரி 22-ம் தேதி நாட்டின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினமாகும். அதேநேரத்தில், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் முதல் 44-வது செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா வரை, ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து விளையாட்டு போட்டிகளும் தமிழகத்தில் நடத்தியது, விளையாட்டுத்துறையில் முதல்வர் ஸ்டாலினின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.
விளையாட்டுத்துறையில் இந்தியா தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெற்ற இந்த 13 நாட்களில் பல்வேறு புதிய தேசிய சாதனைகளையும் படைத்துள்ளனர்.
சாதனைகளை படைத்த பல விளையாட்டு வீரர்கள் ஏழ்மையான குடும்ப பின்னணியையும், கிராமப்புறங்களையும் சேர்ந்தவர்கள். இது போன்ற வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தி சாதனைகளை படைக்க கேலோ இந்தியா போட்டி சிறந்த களமாக இருக்கிறது. கேலோ இந்தியா போட்டியில் மகாராஷ்டிரா 57 தங்கப் பதக்கங்கள் உள்பட 158 பதக்கங்களையும், தமிழகம் 38 தங்கப் பதக்கங்கள் உள்பட 97 பதக்கங்களையும், ஹரியாணா 35 தங்க பதக்கங்கள் உள்பட 103 பதக்கங்களையும் வென்றுள்ளது.
ஒவ்வொரு பதக்கமும் வீரர்களின் அர்ப்பணிப்பையும், ஆர்வத்தையும் காட்டுகிறது. இளம் வீரர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழக விளையாட்டுத்துறை வரலாற்றில் இதுவரை எத்தனையோ தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகம் பங்கேற்றிருந்தாலும், பதக்கப் பட்டியலில் இந்த முறைதான் தமிழ்நாடு முதல் 3 இடங்களுக்குள் வந்திருக்கிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை எடுத்த நடவடிக்கைதான் இதற்கு ஒரே காரணம்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், ஏழை எளிய கிராமப்புற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை அடையாளம் காண்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.
அந்த திறமையானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கான பயிற்சியையும் தமிழக அரசு வழங்கியது. அதன் விளைவாக தான் தமிழ்நாடு இன்று 2-வது இடம் பிடித்திருக்கிறது.
விளையாட்டு என்பதை ஒரு இயக்கமாக தமிழக அரசு மாற்றி வருகிறது. விளையாட்டு துறை சாதனையாளர்கள் நகரத்தில் இருந்து மட்டுமின்றி, கிராமங்களில் இருந்தும் வரவேண்டும். குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த வசதியான வீட்டு பிள்ளைகள் மட்டுமல்ல, எல்லோரும் வர வேண்டும், வெற்றியடைய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்களை’, தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் தமிழக அரசு வழங்க இருக்கிறது. அந்தவகையில், திருச்சியில் வரும் 7-ம் தேதி இத்திட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன். விளையாட்டில் இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காக விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறோம்’ என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி, தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..