சதத்தால் தப்பிய ஷுப்மன் கில் - மற்ற வீரர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைக்குமா?

சதத்தால் தப்பிய ஷுப்மன் கில் - மற்ற வீரர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைக்குமா?
By: TeamParivu Posted On: February 05, 2024 View: 20

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பெரும் பங்களிப்பு ஆற்றியது ஜெய்ஸ்வாலின் இரட்டைச் சதம், அனைத்துக்கும் மேலாக பும்ராவின் அந்த 6 விக்கெட் ஸ்பெல். அத்துடன், கடைசியாக 2-வது இன்னிங்சில் ஷுப்மன் கில் எடுத்த சதமும் உறுதுணைபுரிந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லுக்கு இது 3-வது சதம். சொல்லப்போனால் இச்சதம் அவருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளது என்று கூறப்பட்டாலும், எத்தனை வீரர்களுக்கு இத்தகைய வாய்ப்பு அளிக்கப்பட்டது என்ற கேள்வி எழவே செய்யும்?
மயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டதா? இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் விளாசிய கருண் நாயருக்கு வழங்கப்பட்டதா? முரளி விஜய், அபினவ் முகுந்த் போன்றோருக்கு வழங்கப்பட்டதா? புஜாரா, ரஹானேவுக்கு வழங்கப்பட்டதா? மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டதா? ஏன்... ரெய்னாவுக்கோ, யுவராஜ் சிங்குக்கோ டெஸ்ட் போட்டிகளில் இத்தகைய வாய்ப்புகள் வழங்கப்பட்டதா என்றால், இல்லவே இல்லை.இத்தனை வாய்ப்புகள் வழங்கப்பட ஷுப்மன் கில் என்ன சூப்பர் ஸ்டார் வீரரா? அதுவும் இல்லை. கிரிக்கெட் அல்லாத காரணங்கள் இருக்கக்கூடும் என்றே தெரிகிறது. மற்ற வீரர்களுக்கு கிடைக்காத வாய்ப்புகள் கிடைத்ததில் அணியில் கேப்டன், கோச் மற்றும் பிற லாபிக்கள் இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், லாபியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் கில்.
விசாகப்பட்டின சதத்துக்கு முன்பு ஷுப்மன் கில் 9 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 153 ரன்கள் என்று சொதப்பியுள்ளதைப் பார்க்கலாம். இதில் அதிகபட்ச ஸ்கோர் 36. இருந்தும் வாய்ப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து அவர் டெஸ்ட் அணியில் நீடித்தார். இத்தனை வாய்ப்புகள் வழங்கினால் எந்த ஒரு வீரரும் ஒரு சதம் எடுப்பதில் எந்த ஒரு வியப்பும் வேண்டியதில்லை. இதேபோல் அறிமுக வீரர் ஒருவருக்கு வாய்ப்புகள் வழங்குவார்களா? ஏன் நாளையே ஜெய்ஸ்வால் அடுத்த 8-9 இன்னிங்ஸ்களில் சொதப்புகிறார் என்றால் உடனே தூக்கத்தான் செய்வார்கள்.
ரஜத் படிதார், சர்பராஸ் கானை நாளை அணியில் எடுத்தாலும் ஷுப்மன் கில்லுக்குக் கொடுத்த வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பது ஐயமே. வீரரின் வர்த்தக மதிப்பு அதாவது பிராண்ட் வேல்யூதான் அணித் தேர்வைத் தீர்மானிக்கிறது என்று கூறப்படுவதில் பெரும்பாலும் உண்மை இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஷுப்மன் கில்லுக்கு வெளியிலிருந்து ரசிகர்களிடமிருந்து எதிர்ப்புகளும் அணிக்கு உள்ளேயே அவரை உள்நாட்டுக் கிரிக்கெட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்துகளும் வலுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆகவே, பிரஷர் இல்லாமல் இல்லை. ஆனால் பிரஷரை விடவும் பிராண்ட் வேல்யூ அதிக தாக்கம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒருமுறை இடத்தை இழந்து விட்டால் மீண்டும் அணிக்குள் நுழைவது கடினம் என்பதும் ஷுப்மன் கில்லுக்குத் தெரியும். ஆனால், நேற்றைய அவரது இன்னிங்ஸ் உண்மையில் அதிர்ஷ்டங்களால் நிரம்பியது. நடுவரின் உதவி அவருக்குக் கிட்டியது என்றே கூற வேண்டும். ஒருமுறை பேட்டில் பந்து லேசாகப் பட்டதாக ரிவியூ ரீப்ளே காட்டியது தப்பினார். உண்மையில், அவருக்கே ஆச்சரியம்தான் பேட்டில் பட்டதா என்று. ஆனால், பந்து மட்டையைக் கிராஸ் செய்யும் போது அதன் வேகத்தைப் பொறுத்து எழும் காற்றின் தன்மையிலும் ஹாட் ஸ்பாட் மட்டையில் பட்டதாகக் காட்டும் சந்தர்ப்பங்களும் உண்டு என்று தொழில்நுட்ப நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..