கிராண்ட் ஸ்லாம் பட்டம், நம்பர் ஒன் இடமே லட்சியம் - சொல்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா

கிராண்ட் ஸ்லாம் பட்டம், நம்பர் ஒன் இடமே லட்சியம் - சொல்கிறார் இளம் டென்னிஸ் வீராங்கனை மாயா
By: TeamParivu Posted On: February 06, 2024 View: 30

சமீபத்தில் முடிவடைந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழகம் பதக்கப் பட்டியலில் கடைசி நாளில் அதுவும் இறுதிக்கட்ட நேரத்தில் 2-வது இடத்தை பிடித்து தொடரை நிறைவு செய்ததில் டென்னிஸ் விளையாட்டு முக்கிய பங்கு வகித்தது. கடைசி நாளில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு டென்னிஸ் இறுதிப் போட்டியில் தமிழகம் 2 தங்கப் பதக்கம் வென்றது. இதன் காரணமாகவே பதக்கப் பட்டியலில் தமிழகத்தால் 2-வது இடத்துடன் நிறைவு செய்ய முடிந்தது.
இதில், ஒரு தங்கப் பதக்கம் கோயம்பத்தூரைச் சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவதி வென்றதாகும். இறுதிப் போட்டியில் அவர், தெலங்கானாவைச் சேர்ந்த லட்சு ஸ்ரீ தந்துவை 6-1, 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். ஜூனியர் டென்னிஸ் வட்டாரத்தில் மாயா பிரபலமானவர். ஜூனியர் பிரிவில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையாக திகழும் மாயா.தமிழ்நாட்டிலிருந்து மிளிரும் நம்பிக்கைக்குரிய வளரும் டென்னிஸ் வீராங்கனைகளில் முக்கியமானவராக திகழ்கிறார்.தேசிய அளவிலான போட்டிகளில் யு-12, யு-14, யு-16 ஆகியவற்றில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள மாயா, கடந்த ஆண்டில்ஒற்றையர் பிரிவில் 5 ஐடிஎஃப் பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 3 பட்டங்களையும் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது யு-16, யு-18 பிரிவில் இந்திய அளவில் நம்பர் ஒன் வீராங்கனையாக வலம் வருகிறார் மாயா.
14 வயதிலேயே டென்னிஸ் மீது தீராத பேரார்வம் மற்றும் ஆர்வத்துடன் துறுதுறுவென களத்தில் சுழன்றாடிய மாயா கூறும்போது, “8 வயதில் விளையாட ஆரம்பித்தேன். 6 வருடங்களாக தொடர்ந்து விளையாடி வருகிறேன். தற்போது எனக்கு 14 வயதாகிறது. சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎப்) ஜூனியர் தரவரிசையில் 145-வது இடத்தில் உள்ளேன். அதேவேளையில் அனைத்திந்திய டென்னிஸ் சங்கத்தின் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறேன். டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருவதால் வழக்கமான பள்ளி படிப்பு போன்று இல்லாமல் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) அமைப்பில் 9-ம் வகுப்பு படித்து வருகிறேன்.
ஏதோ ஒரு விளையாட்டில் இருக்க வேண்டும் என்ற நினைப்பில்தான் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தேன். அதன் பின்னர் அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதால் தொழில்முறை போட்டியாகவே மாற்றிக் கொண்டேன். எனது ரோல் மாடலும் எனக்கு மிகவும் பிடித்தவரும் அமெரிக்க முன்னாள் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்தான்.
எந்த வீராங்கனை போன்றும் வரவேண்டும் என்ற எண்ணங்கள் இல்லை. ஆனால் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகவும், இந்தியாவுக்காக முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று கொடுக்க வேண்டும் என லட்சியமும் உள்ளது. இந்தியாவில் இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவிலும் சரி, மகளிர் ஒற்றையர் பிரிவிலும் சரி யாரும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றது இல்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.


  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..