மழை எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு; பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தண்ணீர் திறப்பு..!!

 மழை எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு; பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தண்ணீர் திறப்பு..!!
By: TeamParivu Posted On: May 23, 2022 View: 82

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 117 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், நேற்று முன்தினம் விநாடிக்கு 25,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 16,000 கனஅடியாக சரிந்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் நேற்று 5வது நாளாக தடை நீடித்தது. இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம், விநாடிக்கு 46,353 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 13,074 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி மட்டும் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 115.35 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று இரவு 117 அடியாக உயர்ந்தது.

கடந்தாண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால், குறிப்பிட்ட நாளான ஜூன் 12ல் காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். 28.1.22 வரை 129 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதாலும், மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் வழக்கமான தேதிக்கு முன்பாக, நாளை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்கிறார்.

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் கார் மூலம் மேட்டூருக்கு செல்லும் அவருக்கு, சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தீவட்டிப்பட்டியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தொப்பூர் வழியாக மேச்சேரிக்கு செல்லும் அவருக்கு, மேற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், மேட்டூருக்கு சென்று இரவு ஓய்வெடுகிறார். நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு, மேட்டூர் அணைக்கு சென்று, டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்.

முன்னதாகவே, தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதால், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர், கடலூரில் 30,800 ஏக்கர் என 12 டெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள். இதனால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:
#முதல்வர் மு.க.ஸ்டாலின்  # மேட்டூர் அணை  # காவிரி டெல்டா விவசாயிகள்  # நீர்மட்டம் உயர்வு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..