“திறமை அடிப்படையில் முன்னேற விரும்புகிறேன்” - கிரிக்கெட்டில் அசத்தும் '12th Fail' இயக்குநரின் மகன்

“திறமை அடிப்படையில் முன்னேற விரும்புகிறேன்” - கிரிக்கெட்டில் அசத்தும் '12th Fail' இயக்குநரின் மகன்
By: TeamParivu Posted On: February 01, 2024 View: 32

மும்பை: “என்னைப் பொறுத்தவரை என்னுடைய திறமையின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். என் அப்பாவிடம் சொன்னால் கூட அவர் மற்றவர்களை தொடர்பு கொண்டு எனக்காக பேசுவார் என தோன்றவில்லை” என இயக்குநர் விது வினோத் சோப்ராவின் மகன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான ‘12த் பெயில்’ படத்தின் இயக்குநர் விது வினோத் சோப்ரா. இந்தப் படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டபட்டு ஐஎம்டிபி தரவரிசையில் அதிக ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இவரது மகன் அக்னி தேவ் சோப்ரா. இவர், தற்போது நடைபெற்று வரும் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.
ரஞ்சி டிராபியில் மிசோரம் அணிக்காக ஐந்து சதங்கள் விளாசி அதிரடி காட்டியுள்ள இவர், 8 இன்னிங்ஸில் 767 ரன்கள் எடுத்துள்ளார். ரஞ்சி கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய அப்பா திரைப்பட இயக்குநராகவும், அம்மா (அனுபமா சோப்ரா) சினிமா விமர்சகராகவும் இருந்தபோதிலும் தனக்கு சினிமாவில் ஆர்வமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: “சிறுவயதிலிருந்து நான் சினிமாவுக்கு வருவேனா என பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். ஆனால் ஒருபோதும் சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என நான் ஆசைப்படத்தில்லை. என்னுடைய தந்தை இயக்குநராக இருப்பதால் என்னால் எளிதாக திரையுலகத்துக்குள் வந்துவிடமுடியும். ஆனால் எனக்கு ஆர்வமில்லை. அதாவது நான் திரைப்படங்களைப் பார்ப்பதை விரும்புகிறேன். அதன் மூலம் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கிறேன். ஆனால் அது என் ஆர்வமாக இருந்ததில்லை.
‘நீ செருப்பு தைப்பவனாக இருந்தாலும், அதில் சிறந்தவனாக இரு’ என என்னுடைய தந்தை அடிக்கடி சொல்வார். அவர் நான் என்னவாக விரும்புகிறேனோ அந்த சுதந்திரத்தை எனக்கு கொடுத்தார். ஆனால் அதில் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்பார்” என்றார்.
ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்பு நடந்த 2023 சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்னிதேவின் ஸ்ட்ரைக் ரேட் 150.96. ஐபிஎல் போட்டிகளில் தேர்வாகாதது குறித்து கூறுகையில், “ஒருவேளை நான் சரியாக விளையாடாமல் இருந்திருக்கலாம். அதனால் நான் தேர்ந்தெடுக்கபடவில்லை” என்றார்.
“பல ஐபிஎல் அணிகள் திரையுலகினரால் நடத்தப்படுகின்றன” என கேள்விக்கு, “என்னைப்பொறுத்தவரை என்னுடைய திறமையின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். என் அப்பாவிடம் சொன்னால் கூட அவர் மற்றவர்களை தொடர்பு கொண்டு எனக்காக பேசுவார் என தோன்றவில்லை. என் அப்பா அவர்களை தொடர்பு கொள்வதைக்காட்டிலும், அவர்கள் என் அப்பாவை தொடர்பு கொண்டு பேசும் அளவுக்கு நான் முன்னேற வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..