ஏழை, எளிய மக்கள் கோயில்களில் இலவச திருமணம் செய்ய பதிவு செய்யலாம்..!

ஏழை, எளிய மக்கள் கோயில்களில் இலவச திருமணம் செய்ய பதிவு செய்யலாம்..!
By: TeamParivu Posted On: November 04, 2022 View: 173

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கோயில் மூலம் ₹20 ஆயிரம் திட்டச்செலவில் இலவச திருமணம் செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருமணத்திற்கு கோயிலில் பதிவு செய்ய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோயில்கள் உள்ள மாநிலம் தமிழகமாகும். இங்கு 24 ஆயிரத்து 608 சிவன் கோயில்களும், 10 ஆயிரத்து 33 பெருமாள் கோயில்களும்,  10 ஆயிரத்து 346 சிறிய, பெரிய கோயில்களும் உள்ளன. இதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 38 ஆயிரத்து 615 கோயில்கள் உள்ளன. கோயில்களில் தற்போது அன்னதான திட்டம், தினசரி பிரசாதம் வழங்கும் திட்டம், பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேலும் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காத கோயில்களை கண்டறிந்து, அந்த கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தவும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பது, குத்தகை வராத நிலங்களுக்கு குத்தகை ெதாகை, வாடகை வசூல் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க ஏழை, எளிய மக்களுக்கு கோயில்களில் திருமணம் செய்து வைக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் ‘‘ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுக்கு 500 ஜோடிகளுக்கு கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தை கோயில் நிர்வாகமே ஏற்கும்,’’ என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து சேலம் மண்டலத்திற்குட்பட்ட முதல் நிலை கோயில்களில் இலவச திருமணம் பற்றிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் சேலம் சரகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு தலா 25 ஜோடிகளுக்கு கோயில்களில் திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளது. இவ்வாறு கோயில்களில் திருமணம் செய்யும் ஜோடிகள், முன்கூட்டியே விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் பூர்த்தி அடைந்து இருக்கவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் வாங்கி வரவேண்டும். அந்த விண்ணப்பத்தை கோயில் அதிகாரிகள் சரிபார்த்து கோயிலில் திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் அளிப்பார்.

இவ்வாறு கோயில்களில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு அங்ேகயே பதிவு திருமணசான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழில் மணமகன், மணமகள் கையொப்பமிட வேண்டும். மணமகன், மணமகள் உறவினர்கள் இரண்டு பேர் சாட்சி கையொப்பமிட வேண்டும். இதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இலவச திருமணம் நடத்தப்பட உள்ளது. இலவச திருமணம் செய்யும் மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதற்கான ஆதார சான்று சமர்பிக்கப்பட வேண்டும். முதல் திருமணம் என்பதற்கான சான்றை சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் வாங்கி வரவேண்டும்.

சட்டவிதிகள் அடிப்படையில் திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்வாகும் ஜோடிகளுக்கு திருமண கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். திருமணத்துக்கான முழு ஏற்பாடுகளை செய்ய ஒரு ஜோடிக்கு ₹20 ஆயிரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. திருமாங்கல்யம் 2 கிராம் தங்கத்திற்கு ₹10 ஆயிரம், மணமகன் ஆடைக்கு ₹1000, மணமகள் ஆடை ₹2 ஆயிரம், மணமகன், மணமகள் வீட்டார் 20 பேருக்கு திருமண விருந்து ₹2 ஆயிரம், பூ மாலைகள் ₹1000, பாத்திரங்கள் ₹3 ஆயிரம், இரவு செலவு ₹1000 சேர்த்து மொத்தம் ₹20 ஆயிரமாகும்.

சேலம் மண்டலத்தில் சேலம் சுகவனேஸ்வரர் கோயில், கோட்ைட பெருமாள் கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில், ஆறகளூர் காயநிர்மலேஸ்வரர் கோயில் உள்பட ேசலம், தர்மபுரி மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கோயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச திருமணம் செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தை அணுகி பதிவு செய்து  கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags:
#இலவச திருமணம்  # அறநிலையத்துறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..