சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நீர்நிலை, கால்வாய்களில் குப்பை கொட்டினால் கைது நடவடிக்கை..!!

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நீர்நிலை, கால்வாய்களில் குப்பை கொட்டினால் கைது நடவடிக்கை..!!
By: TeamParivu Posted On: November 11, 2022 View: 117

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் குப்பை, பிளாஸ்டிக் கழிவு மற்றும் திடக்கழிவுகளை கொட்டினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சி நிர்வாக செயலாளர் சிவ் தாஸ் மீனா எச்சரித்துள்ளார். வடகிழக்கு பருவ மழையையொட்டி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

இக்கூட்டத்தில் அவர் அறிவுறுத்தியதாவது: சென்னையில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக மழைநீர் வடிகால்களின் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் உள்ள அடைப்புகளை சீர்செய்யும் பணிகளை விரைந்து மேற்கொண்டு, சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர்செய்யவும், முடிக்கப்படாமல் உள்ள வண்டல் வடிகட்டித் தொட்டிகளை விரைந்து அமைக்கவும் வேண்டும். கடந்த வாரம் பெய்த மழையில் தண்ணீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். மேலும், நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களில் மழையின் காரணமாக சாலை மற்றும் தெருக்களிலிருந்து அடித்து வரப்பட்ட திடக்கழிவுகள் தேங்கியிருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசடையும் அபாயம் உள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கிறது. இதேபோல், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் நீரோட்டம் தடைபட்டு, கொசு உற்பத்தி, துற்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற தடையாக உள்ளதுடன், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.  

எனவே, நீர்நிலைகள், கால்வாய்களில் பிளாஸ்டிக், குப்பை மற்றும் இதர திடக்கழிவுகளை கொட்டும் நபர்களின் மீது உடனடியாக காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் கால்வாய் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகாமையில் குப்பை, பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்த்து, தங்கள் இல்லங்களிலேயே மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதை மீறி நீர்நிலை மற்றும் கால்வாய்களில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 879 இடங்களில் மோட்டார் பம்புகள் தயார்நிலையில் இருக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஆபத்தான மற்றும் விழும் நிலையில் உள்ள 1,018 மரங்களின் கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வார மழையின்போது, தண்ணீர் தேங்கிய தேனாம்பேட்டை ஜி.பி.சாலை, ராயபுரம் பிரகாசம் சாலை போன்ற சாலைகளில் மழைநீர் வெளியேறி கால்வாய்களில் கலக்கும் இடங்களில் உள்ள அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் பிளாஸ்டிக் போன்ற திடக்கழிவுகளை அடையாற்றின் கரையில் கொட்டிய நபர் மாநகராட்சி அலுவலர்களால் கண்டறியப்பட்டு திடக்கழிவுகளை கொண்டு வர பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தயார்நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

* 119 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் :

சென்னையில் கடந்த வாரம் பெய்த மழைக்கு பின்னர் நேற்று வரை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள 344 நீர்நிலைகளிலிருந்து 119 மெட்ரிக் டன் கழிவுகள் தீவிர தூய்மைப் பணியின் மூலம் அகற்றப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.1,35,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

* 1968 வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைப்பு :

மாநகராட்சியின் சார்பில் கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 1,968 எண்ணிக்கையிலான விடுபட்ட வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,089 எண்ணிக்கையிலான வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் மழையின் காரணமாக ஏற்பட்ட அடைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள பங்கிங்காம் கால்வாய், அடையாறு ஆறு உள்பட பல கால்வாய்களில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் விதிமீறி குப்பை கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாதமல், குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:
#சுற்றுச்சூழல்  # நீர்நிலை  # குப்பை  # நகராட்சி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..