மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் சென்னையில் உலக தரத்தில் மெகா ஜவுளி நகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

மாமல்லபுரத்தில் ரூ.30 கோடியில் கைத்தறி அருங்காட்சியகம் சென்னையில் உலக தரத்தில் மெகா ஜவுளி நகரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: November 26, 2022 View: 78

சென்னையில் உலகத் தரத்தில் மெகா ஜவுளி  நகரம் உருவாக்கப்படும். மாமல்லபுரத்தில் ரூ.30  கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்கப்படும். ரூ.10 கோடி செலவில், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை  உள்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் நிறுவிடவும் தமிழக அரசு  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளித்துறை கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளித்துறை கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஒன்றிய கைத்தறி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் சக்சேனா, துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஒவ்வொரு துறையிலும் தமிழக அரசு பன்னாட்டு அளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில்துறை முன்னணியில் இருக்கிறது. உலகத்தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிறுவனங்களை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த வரிசையில் துணிநூல் துறையின் சார்பில் முதன்முறையாக ஜவுளித் தொழில் குறித்தான பன்னாட்டு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும். 

அதற்காகத்தான் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் அடையாளம் கதர் என்பதைப் போல நம்முடைய அமைச்சர் காந்தியின் அடையாளமாக துணிநூல் துறை அமைந்துவிட்டது.
அந்தவகையில், சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் ரூ.2 கோடியே 50 லட்சம் அரசு மானியத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறையின் கீழ் இயங்கும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ.2,500 வீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது. மேலும், மூன்று கூட்டுறவு நூற்பாலைகளில் 11 கிலோவாட் உயர் மின்னழுத்த மின்பாதைகள் நிறுவிட தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை உருவாக்கிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்து நவீனப்படுத்திட ரூ.29 கோடியே 34 லட்சம் செலவில் செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் கிராமத்தில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் மாபெரும் ஜவுளிப்பூங்கா அமைத்திட சிப்காட் நிறுவனம் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப ஜவுளிகளின் முக்கியத்துவம் மற்றும் மாநிலத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழக அரசின் ஜவுளித் துறை, ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல, கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி மற்றும் மனிதவளம் ஆகியவற்றில் தமிழகம், இந்தியாவுக்கு முதன்மையான பங்களிப்பை அளித்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தொழில்வளம், அமைதியான சூழல், தொழில் தொடங்குவதற்கான எளிய நடைமுறைகள், முன்னேறிவரும் பொருளாதாரச் சூழ்நிலை, திறன்மிகு மனிதவளம் ஆகியவற்றின் காரணமாக அனைவரையும் ஈர்க்கும் மாநிலமாக நமது தமிழ்நாடு இருக்கிறது. தமிழக அரசின் முனைப்பான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு பன்னாட்டு தொழில் முனைவோர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் தமிழகம் 2வது பெரிய மாநிலமாக திகழ்கிறது.

4 பெரிய பன்னாட்டு விமான நிலையங்கள், 2 உள்நாட்டு விமான நிலையங்கள், 3 பெரிய துறைமுகங்கள், 19 சிறிய துறைமுகங்களை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. 2 லட்சத்து 53 ஆயிரத்து 510 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைவழி வசதியைக் கொண்டு முதலீட்டாளர்களும், ஏற்றுமதியாளர்களும் மிகவும் விரும்பும் மாநிலமாக விளங்குகிறது.

தமிழகம் 80 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. திறமைவாய்ந்த சிறந்த தொழில்நுட்ப பணியாளர்களையும் கொண்டுள்ளது. இத்தகைய தனித்தன்மையின் காரணமாக அனைத்து துறைகளிலும் நாம் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இதில் ஜவுளித்துறையும் ஒன்றாக இருக்கிறது.

இதேபோல், ஜவுளித்துறையை பொறுத்தவரை, தமிழகம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியில் 3வது பெரிய இடத்திலும் இருக்கிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக ஜவுளித் தொழில் உள்ளது. அதனால்தான் அரசு பொறுப்பேற்றவுடன் புதிதாக ஜவுளித் துறை என்ற ஒன்றை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக, தொழில்நுட்ப ஜவுளித் தொழிலின் உலகளாவிய போக்கினை அறிந்து, பன்னாட்டு கருத்தரங்கினை இந்த அரசு நடத்துகிறது.

எல்லாத்துறைகளும் வளர வேண்டும். அதில் புதுமைகளை புகுத்த வேண்டும், உயர் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறோம். அதற்கு ஏற்ற கொள்கைகளை வகுத்துததந்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் தொழில்துறை மூலமாக, முதலீட்டு மானியம், தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவானது “சன்ரைஸ் செக்டார்” என அடையாளம் காணப்பட்டு சலுகைகள், தொழிற்பூங்கா அமைப்பதற்கான உதவிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதி உதவி, ஒற்றைச் சாளர வசதி, முத்திரைப்பதிவுக் கட்டணச் சலுகைகள் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

வளர்ந்து வரும் துறைகள் இனத்தில் தொழில்நுட்ப ஜவுளி சேர்க்கப்பட்டு ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கு - சிறப்பு முதலீட்டு மானிய உதவியாக ரூபாய் ஒரு கோடியே 50 இலட்சம் வழங்கப்படுகிறது.
ஜவுளித் தொழிலில் தமிழகம் எப்போதுமே முன்னணி வகிக்கக்கூடிய மாநிலம். இந்தியாவினுடைய மொத்த ஜவுளி ஏற்றுமதி வருவாயில் தமிழகம் மட்டுமே 12 விழுக்காடு பங்களிப்பை வழங்குகிறது. ஜவுளித் தொழிலில் புதிய தொழில்நுட்ப உத்திகளை கடைபிடித்து, உலக அளவில் தேவைப்படும் பல்வேறு துணிவகைகளையும் தமிழகம் உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் 1,861 நூற்பாலைகள் உள்ளன. இது இந்திய நாட்டின் பங்கில் 55 விழுக்காடு ஆகும். இங்கு 23 மில்லியன் நூற்பு கதிர்கள் செயல்பட்டு வருகின்றன. இது நாட்டின் நூற்பு கதிர்களின் எண்ணிக்கையில் 43 விழுக்காடு ஆக உள்ளது.
மேலும், இந்தியாவிலுள்ள விசைத்தறிகளில் 23 விழுக்காடு விசைத்தறிகள் தமிழகத்தில் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 31 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. எனவேதான், நாம் இந்த துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

ஜவுளித்துறையின் எதிர்காலமே தொழில்நுட்ப ஜவுளிகளின் வளர்ச்சியைச் சார்ந்திருப்பதை நன்கு உணர்ந்துள்ளோம்.
அதில், விளையாட்டுத் துறையினருக்கான துணிகள், நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த துணிகள், மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிற மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் துணிகள், ஆட்டோமொபைல் துறையில் பயன்படுத்தப்படும் காற்றுப்பைகள், சீட் பெல்ட்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் உலகத் தரத்தில் மெகா ஜவுளி நகரம் உருவாக்கிட முயற்சிகள் எடுத்து வருகிறோம். 

மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் அமைத்திடவும் திட்டமிட்டுள்ளோம். ரூ.10 கோடி செலவில், நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உள்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் நிறுவிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கரூர், காஞ்சிபுரம், திருப்பூரில் ஏற்றுமதி மையங்கள்
மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியை பன்மடங்கு அதிகரிக்க கரூர், திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கக்கூடிய பணிகளையும் விரைந்து செயல்படுத்தி வருகிறோம். இவை அனைத்திற்கும் அடித்தளம் அமைக்கும் கருத்தரங்காக இந்த 2 நாள் கருத்தரங்கம் அமைய வேண்டும். தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான விழிப்புணர்வையும், அதிலுள்ள ஒளிமயமான சந்தை வாய்ப்புகளையும் தொழில் முனைவோரிடம் இக்கருத்தரங்கு ஏற்படுத்தும் என நம்புகிறேன். அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோர் அனைவரும் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்நுட்ப ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.

Tags:
# கைத்தறிஅருங்காட்சியகம்  # சென்னை  # மெகாஜவுளிநகரம்  # முதல்வர்  # மு.க.ஸ்டாலின்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..