பக்தர்கள் அதிகமாக வரும் மேலும் 5 கோயில்களில் மருத்துவ மையங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

பக்தர்கள் அதிகமாக வரும் மேலும் 5 கோயில்களில் மருத்துவ மையங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
By: TeamParivu Posted On: December 03, 2022 View: 51

பக்தர்கள் அதிகமாக வரும் மேலும் 5 கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

 2021-22ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வரும் 10 கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில். 

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட கோயிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 31.12.2021 காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் மருத்துவ மையங்கள் திறந்து வைக்கப்பட்டன. தொடர்ந்து, 2022-23ம் அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகம் வரும் 10 கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 

இந்தாண்டு மேலும் 5 கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரியம்மன் கோயில், மதுரை கள்ளழகர் கோயில், சங்கரன்கோயில் சங்கர நாராயணசுவாமி கோயில் ஆகிய 5 கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ மையங்களில் பணியாற்ற தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக இருக்கும். இதற்கான செலவினங்கள் அந்தந்த கோயிலின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:
#மருத்துவமையங்கள்  # முதல்வர்  # மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..