தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவுப் பொருள் பார்சல் வழங்க தடை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவுப் பொருள் பார்சல் வழங்க தடை..!!
By: TeamParivu Posted On: December 06, 2022 View: 80

ஈரல் புற்று நோய், மார்பக புற்றுநோய், ஹார்மோன் பிரச்னைகள், சிறுநீரகக் கற்கள்  போன்ற நோய்களை  உருவாக காரணமாக விளங்கும் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவுப் பொருட்கள் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் அழிவதில்லை. சராசரியாக ஒரு பாலித்தீன் பையின் பயன்பாட்டுக் காலம் 12 முதல் 20 நிமிடங்களே என்றாலும் அவை அழிய 1000 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பிடிக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. பயன்பாடற்ற ஒரு நச்சுவேதிப் பொருளின் நெடிய ஆயுட்காலம் என்பது இயற்கையின் நியதிக்கு மிக மிக ஆபத்தான முரண்பாடாகும்.

அதிலும் பிளாஸ்டிக்கின் அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக அவை கற்பனைக்கெட்டாத அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளையும், மானுடரல்லாத பிற உயிர்களையும், இயற்கைச் சூழலையும் பற்றிய அக்கறையற்ற சுயநலமே இன்றைய நிலையாக உள்ளது. இதை தடுக்க மறுசுழற்சி என்பதும் பெரிதும் பயன்தரப் போவதில்லை. ஏனென்றால் 10 சதவீத பிளாஸ்டிக் பொருள்களே மீண்டும் பயன்படுத்தத் தக்கவையாக இருக்கின்றன. மற்ற 90 சதவீதப் பொருட்களும் வீணே எரிக்கப்பட்டு, வீதிகளில் எறியப்பட்டு விடுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உணவகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் சூடான உணவுப் பொருட்களை பொட்டலமிடும் பொழுது, அப்பைகளிலிருந்து, டை ஈதைல் ஹெக்சைல் தாலேட் மற்றும் பிஸ்ஃபினால்-ஏ போன்ற வேதிப்பொருட்கள் வெளியாகி, அவை உணவுடன் கலந்து விடும். அவ்வாறு, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கிலிருந்து வெளிப்படும் டை ஈதைல் ஹெக்சைல் தாலேட் மற்றும் பிஸ்ஃபினால்-ஏ போன்ற வேதிப்பொருட்கள் கலந்த உணவினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு, ஹார்மோன் பிரச்னைகள், சிறுநீரகக் கற்கள், ஈரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதிற்கு பல அறிவியல் ஆய்வுகள் ஆதாரமாக உள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பொட்டலமிடுதல்) ஒழுங்கு முறைகள், 2018ன் பட்டியல்-ஐஐஐ-ல் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடப் பயன்படுத்த வேண்டிய உணவுத் தர பிளாஸ்டிக் பொருட்களின் வகைகள் குறித்தும், அதே ஒழுங்குமுறைகளின் பட்டியல்-ஐஏ-ல் உணவுப் பொருட்களின் வகைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டிய பொட்டலமிடும் பொருட்களின் வகைகளும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் சூடான உணவுப் பொருட்களைப் பொட்டலமிடக்கூடாது எனவும், அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்டு வந்துள்ளது. இருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

எனவே, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடக் கூடாது என்பதை மேலும் வலியுறுத்தும் விதமாக, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “பிளாஸ்டிக்கும் பாழாப்போன பார்சலும்” என்ற விழிப்புணர்வு குறும்படத்தினை கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.

ஆனால், அதே வேளையில், சூடான உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதால், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க சூடான உணவுப் பொருட்களை, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதைத் தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

 எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் சூடான உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதை இன்று முதல் தடை செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உரிய ஆணை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருவதால், உணவு வணிகர்கள் எவரும் டீ, காபி, பால், சாம்பார், ரசம் மற்றும் இதர சூடான குழம்பு வகைகளையும் கூட்டு, பொரியல் போன்ற சூடான உணவுப் பொருட்களையும் மேற்கூறிய ஒழுங்குமுறைகளின் கீழ் அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்படுகின்றது.

தவறும் பட்சத்தில், குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்றவராகவோ அல்லது அதற்குத் தகுதி வாய்ந்தவராகவோ இருப்பின், மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் “சமரசத் தீர்வு” மூலம் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பிரயோகித்து, அதே சட்டத்தின் பிரிவு 55, 56 மற்றும் 58-ன் கீழ், முதல் முறையாக குற்றம் செய்தவராக இருப்பின், ரூ.2000க்கு மிகாமலும், இரண்டாம் முறை குற்றமிழைத்தால், ரூ.5000க்கு மிகாமலும் அபராதம் விதிக்கப்படும். 

ஆனால், ஒரே வணிகர் திரும்பவும் மூன்றாம் முறையாகக் குற்றமிழைத்தால், ரூ.10000 அபராதம் விதிக்கப்படுவதுடன், உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, கடையின் இயக்கத்தினை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயத்தில், குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவராக இருந்தால், மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் மேற்கூறிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

உணவு வணிகர்கள் தங்களது கடைகளின் முகப்பில், “இங்கு அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படமாட்டாது” என்ற அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டும் எனவும், பொதுமக்கள் உணவுப் பொருட்களைப் பார்சல் வாங்க, தூக்குவாளி, பிளாஸ்டிக், டிபன் பாக்ஸ், டிபன் கேரியர் உள்ளிட்ட பாத்திரங்களை கொண்டு சென்று மாவட்ட நிர்வாகத்தின் இந்நல்முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

Tags:
#பிளாஸ்டிக்கவர்  # பார்சல்  # கலெக்டர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..