சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் திருவுருவ சிலை; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்...!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் திருவுருவ சிலை; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்...!
By: TeamParivu Posted On: May 28, 2022 View: 78

சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. தமிழகத்தில் முதலமைச்சராக 5 முறை பணியாற்றியவர் கலைஞர். அனல் பறக்கும் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர். இந்திய திருநாட்டிற்கே பல முன்னோடி திட்டங்களை தந்திட்டவர்.  “உடன்பிறப்பே” எனும் தன் காந்தக் குரலால், திமுகவினரை கட்டிப்போட்டவர். நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட உத்தம தலைவர்களை போற்றி திருவுருவ சிலைகளும், அழகிய மணிமண்டபங்களும் அமைத்திட்டவர், ஏழை எளியோர் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற திட்டங்களை தந்தவர்.

கதை, கவிதை, நாடகம் என தான் தொட்ட  அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும்   தன்னிகரற்ற தனி பெருந்தலைவராக வலம் வந்தவர் கலைஞர். இளம் வயது தொடங்கி, இறப்பிலும் போராடி வெற்றி கண்டவர். பகுத்தறிவு பகலவன் குருகுலத்தில் பயின்றவர். அண்ணாவால், “என்தம்பி” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்டவர்.  பேராசிரியர் அன்பழகனால், பன்முகத்தன்மை கொண்ட தலைவர் என்றும் பாராட்டப்பட்டவர். உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர். கலைஞரை சிறப்பித்து  போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர்  தோட்டத்தில் கலைஞருக்கு முழுஉருவ சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி, தமிழக  சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீர  கலைஞரின் கலைமிகு சிலை நிறுவும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞர் சிலை 14 அடி உயர பீடம் அமைக்கப்பட்டு, 16 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. வெண்கலத்தில் ஆன கலைஞர் சிலை 2 டன் எடை கொண்டது.  சிலை வைக்கும் இடத்தை சுற்றி சுமார் 5,300 சதுர அடியில் சுற்றுச்சுவர்  அமைக்கப்பட்டுள்ளதுடன், அழகிய பூங்கா, வண்ண விளக்குகள் உள்ளிட்ட அழகிய வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் சிலை அமைக்கும் இறுதிக்கட்ட பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சென்று பார்த்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் உடன் இருந்தனர். கலைஞர் சிலை அமைந்துள்ள இடத்தை பார்வையிட்ட முதல்வர், கூடுதலாக என்ன செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். இந்நிலையில் சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. கலைஞரின் முழு உருவச்சிலையை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

முதலமைச்சராக 5 முறை பதவி வகித்த கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரமுள்ள வெண்கல சிலையின் கீழ் அமைந்துள்ள 14 அடி உயர பீடத்தில், கலைஞரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி வருகையொட்டி சென்னை அண்ணாசாலை மற்றும் விழா நடைபெறும் ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களை கவரும் கலைஞர் சிலை 16 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் சிலை, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் புதுப்பேடு பகுதியில் தத்ரூபமாக தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த சிலை அண்ணாசாலை வழியாக செல்வோரை கவர்ந்து இழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. கலைஞர் தினசரி சென்று பார்த்து பார்த்து கட்டிய அழகான கட்டிடத்தை, அதிமுக ஆட்சியில் மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார்.

மேலும், அந்த வளாகமும் பராமரிப்பு இல்லாமல் காட்சி அளித்தது. தற்போது, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கலைஞரின் சிலையை அந்த வளாகத்தில் வைக்க ஏற்பாடு செய்துள்ளதுடன், அந்த வளாகத்தை சுற்றியுள்ள பூங்காக்களும் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதன்மூலம் சென்னை மக்கள் மற்றும் சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள் கூட கலைஞர் சிலையை பார்த்து செல்லும் ஆர்வத்தை தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags:
#ஓமந்தூரார் அரசினர் தோட்டம்  # சென்னை  # உடன்பிறப்பே  # கலைஞரின் திருவுருவ சிலை  # வெங்கையா நாயுடு  # கதை  # கவிதை  # நாடகம்  # கலைஞர் சிலை  # முதல்வர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..