பல மாநிலங்கள் எதிர்த்து வரும் நிலையில் ஆன்லைன் விளையாட்டுக்கு வரிவிதிப்பு தள்ளிவைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பின்வாங்கியது ஒன்றிய அரசு..!!

பல மாநிலங்கள் எதிர்த்து வரும் நிலையில் ஆன்லைன் விளையாட்டுக்கு வரிவிதிப்பு தள்ளிவைப்பு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பின்வாங்கியது ஒன்றிய அரசு..!!
By: TeamParivu Posted On: December 18, 2022 View: 92

தமிழகம் உட்பட பல மாநிலங்களின் எதிர்ப்பால், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரி விதிப்பு முடிவு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்காமல் ஒன்றிய அரசு பின்வாங்கி உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் தலைவராக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த கவுன்சில் கூடி, வரி விதிப்பு மாற்றங்கள், புதிய வரி விதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தும். இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்கள் என பலர் கலந்து கொள்வார்கள்.

47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் 28, 29ம் தேதிகளில் சண்டிகரில் நடந்தது. இதில் அரிசி, பேக்கிங் கோதுமை மாவு, அப்பளம், தயிர், தேன், மோர், லஸ்சி, கத்தி பிளேடு, ஷார்ப்பனர், பென்சில், மருத்துவமனை அறை, எல்இடி விளக்குகள், சோலார் வாட்டர் ஹீட்டர்கள், காசோலை என சுடுகாடு வரை ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு, ரேஸ் கோர்ஸ், கேசினோவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் பலர் தற்கொலை செய்து வருவதால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கின. இதனால், அந்த கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படவில்லை. 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில் பேசிய நிர்மலா சீதாராமன், 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறும் என அறிவித்தார். ஆனால் கடந்த 26ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் டிவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், ‘48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டிசம்பர் 17ம் தேதி காணொலி மூலம் நடைபெறும்’ என தெரிவித்திருந்தது.

இந்த 48வது கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொண்டு வருவது மற்றும் ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் ஏராளமான தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருவதை தடுக்க ஆன்லைன் விளையாட்டுக்கு தற்போது விதிக்கப்படும் 18% பதிலாக 28% வரி விதிப்பது, கேசினோ மற்றும் ரேஸ் கோர்சுக்கு 28% வரி விதிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட மேகலாயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் அமைச்சர்கள் குழு கடந்த மாதம் 3வது வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த சூழலில், 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி மூலம் நேற்று நடந்தது. இதில், பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வரி விதிப்பில் மற்றும் உச்சவரம்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

கூட்டத்திற்க்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நேரமின்மை காரணமாக 15 நிகழ்ச்சி நிரல்களில் 8 விஷயங்களை மட்டுமே கவுன்சில் முடிவு செய்ய முடிந்தது. ஆனால் புதிய வரிகள் எதுவும் கொண்டு வரப்படவில்லை’’ என்று தெரிவித்தார். ஆன்லைன் விளையாட்டு, ரேஸ் கோர்ஸ், கேசினோவுக்கு 28% வரி விதிப்பது, பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைப்பது குறித்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கை ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. அதே சமயம் எஸ்யூவி கார்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு 22 சதவீதம் செஸ் வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் எஸ்யூவி மோட்டார் வாகனத்திற்கு 22% இழப்பீடு செஸ் பொருந்தும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  

சில மாநிலங்கள் செடான் கார்களை எஸ்யூவி பிரிவில் சேர்க்க வேண்டுமா என்று கேட்டபோது இதுதொடர்பாக ஒரு வரையறையை கொண்டு வரவும் மாநிலங்கள் பரிந்துரைத்தன. 22% செஸ்ஸில் வேறு ஏதேனும் மோட்டார் வாகன வகைகளை சேர்க்க வேண்டும் என்றால், மத்திய மற்றும் மாநில வரி அதிகாரிகள் குழு அதை பரிசீலிக்கும் என்று கவுன்சில் முடிவு செய்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.1.4 லட்சம் கோடியாக இருக்கும் வரி வசூலை அதிகரிக்க, ஜிஎஸ்டி தளத்தை ஒவ்வொரு மட்டத்திலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது, 1.40 கோடி வரி செலுத்துவோர் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவர் தாமதம் செய்ததால், அந்த மசோதா காலாவதியாகி விட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ஆளுநரை நீக்கக்கோரியும், நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை திமுக எம்பி வில்சன் தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக அந்தந்த அரசுகள் போர்க்கொடி தூக்கி வருவதால், வரி விதிப்பது குறித்து விவாதிக்காமல் ஒன்றிய அரசு பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜிஎஸ்டி வழக்கு வரம்பு ரூ.2 கோடியாக உயர்வு

* ஜிஎஸ்டியின் கீழ் வழக்குத் தொடர வரித் தொகையின் குறைந்தபட்ச வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* ரூ.5 கோடிக்கும் அதிகமான மோசடி குற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ஜிஎஸ்டி சட்டம் தற்போது வரம்பை 1 கோடியாக நிர்ணயித்துள்ளது.

* சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கப்படாமல் அல்லது இரண்டும் இல்லாமல் போலி பில்களை வழங்கிய குற்றத்தைத் தவிர, வரித் தொகையில் தற்போது 50 முதல் 150 சதவீதம் வரை கூட்டுத் தொகை, 25 முதல் 100 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. போலி பில் தொடர்பான அபராதம் ரூ.1 கோடியாக தொடரும்.

* தவிடு, உமி ஆகியவற்றுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மோட்டார் ஸ்பிரிட்டுடன் (பெட்ரோல்) கலப்பதற்காக சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வழங்கப்படும் எத்தில் ஆல்கஹால் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

* வெல்லம் மற்றும் பல்வேறு வகையான அப்பளங்களுக்கு 18% வரி நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* அக்டோபர் 1, 2023 முதல் இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் மூலம் மாநிலங்களுக்குள் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதவர்கள் பணத்தை திரும்ப பெற வாய்ப்பு

ரூபே கடன் அட்டைகள், குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்குரிய பிம் யுபிஐ ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் வங்கிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்கு வரிவிதிப்பு கிடையாது. புதிதாக எந்த பொருள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை. ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதவர்களுக்கு சேவைக் குறைபாடுகள் ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுகின்ற நடைமுறை இப்போது இல்லை. எனவே இதில் மாற்றம் கொண்டுவர சிஜிஎஸ்டி விதிகள் 2017ல் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்தது. 

Tags:
#ஆன்லைன்விளையாட்டு  # வரி  # ஜிஎஸ்டிகவுன்சில் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..