தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் ரூ.920.56 கோடியில் செயல்படுத்தப்படும்: வனத்துறை அமைச்சர் தகவல்..!!

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் ரூ.920.56 கோடியில் செயல்படுத்தப்படும்: வனத்துறை அமைச்சர் தகவல்..!!
By: TeamParivu Posted On: December 21, 2022 View: 60

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் ரூ.920.56 கோடியில் செயல்படுத்தப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலக வனத்துறை கூட்டரங்கில் இன்று (21.12.2022) வனத்துறை அமைச்சர் மருத்துவர். மா.மதிவேந்தன் தலைமையில் வனத்துறை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் வனத்துறையை தமிழகத்தின் முதன்மையான துறையாக உயர்த்திட பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். அதற்கேற்ப, அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். தமிழக மக்கள் இயற்கையை பேணுவதிலும், சுற்றுச்சூழல் நன்றாக பராமரிப்பதிலும் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளில் வனத்துறை நவீனப்படுத்தப்படுவதன் மூலம் மக்கள் வரவேற்பைப் பெற்றிட தங்களது பங்களிப்பினை நல்க வேண்டும்.

தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்திற்கு ரூ.920.56 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதற்காக ஜப்பான் நிதியுதவி பெறப்படவுள்ளது. வளம் குன்றிய வனப்பகுதிகளை மீட்டெடுக்கும் திட்டத்திற்கும் நபார்டு ரூ.281.14 கோடி வழங்க உள்ளது. இந்த திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், அதற்கு தேவையான மரக்கன்றுகளை வளர்த்து நடவும் திட்டமிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு ஈடுசெய் காடு வளர்ப்பு நிதியின் மூலம் ரூ.38.82 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. வனத்துறை வனப்பாதுகாப்பு நவீனப்படுத்துதல் பணிகளுக்கு ரூ.45 கோடி நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைத்திட பூர்வாங்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வனப்பாதுகாப்பு பணியாளர்களின் வசதிக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் 250 மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்கி வழங்கப்படவுள்ளன.

பசுமைத்தமிழகம் இயக்கம் திட்டத்தில் 10 ஆண்டுகளில் 260கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடப்படுவதன் மூலம் 23.7% ஆக உள்ள வனப்பரப்பை 33% ஆக உயர்த்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தில் நடப்பாண்டு 2 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவு செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு, 7 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சீருடை வனப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 1161 சீருடை வனப்பணியாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளனர். 100 கிராமங்களில் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலா சுற்றுத்தடங்கல் புதிதாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனப்பாதுகாப்பிற்கு மோப்ப நாய் பிரிவு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் வனத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு.இ.ஆ.ப., வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்) சையது முஜமில் அப்பாஸ்.இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள், கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு வனத்துறை பணிகள் குறித்து தெரிவித்தார்கள்.

Tags:
#தமிழ்நாடுபல்லுயிர்பாதுகாப்பு  # பசுமையாக்கல்திட்டம்  # வனத்துறை  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..