முன்னாள் எம்.பி. மஸ்தான் இறப்பில் திடீர் திருப்பம்; ரூ15 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் துண்டால் முகத்தை மூடி கொன்றோம் பரபரப்பு வாக்குமூலம்..!!

முன்னாள் எம்.பி. மஸ்தான் இறப்பில் திடீர் திருப்பம்; ரூ15 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் துண்டால் முகத்தை மூடி கொன்றோம் பரபரப்பு வாக்குமூலம்..!!
By: TeamParivu Posted On: December 31, 2022 View: 37

திமுக சிறுபான்மை அணி செயலாளரும், முன்னாள் எம்பியுமான மஸ்தான், ரூ.15 லட்சம் கடனை திரும்ப கேட்டதால் சகோதரன் மருமகன் நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்தே முகத்தை மூடி மூச்சை திணறடித்து படுகொலை செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது. கொலைக்கு காரணமான சகோதரன் மருமகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் முன்னாள் எம்பி மஸ்தான் தஸ்தகீர் (66). இவர், திமுகவில் மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்தார். மஸ்தான் தனது மகனுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தார்.

உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க கடந்த 21ம் தேதி இரவு திருச்சிக்கு சென்றபோது, அவரது சகோதரன் மருமகன் இம்ரான் பாஷா, திருச்சிக்கு உங்கள் கூட வருகிறேன். நீங்கள் தனியாக போக வேண்டாம் என்று கூறியுள்ளார். மஸ்தானுடன் இம்ரானும் அன்று இரவு 9.30 மணிக்கு புறப்பட்டுள்ளார். நள்ளிரவு திடீரென இம்ரான் பாஷா மஸ்தான் வீட்டிற்கு போன் செய்து மஸ்தான் இறந்துவிட்டதாக கூறினார். உடனே, அவரது மகன் ஷாநவாஸ் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து மருத்துவமனைக்கு சென்றனர்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மஸ்தான் உடலை பரிசோதனை செய்த பிறகு, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதேநேரம் இறந்தவர் முன்னாள் எம்பி. எனவே, உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதற்குள் மஸ்தான் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து மஸ்தான் உடலை பார்த்து கதறி அழுதனர். மஸ்தான் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் டாக்டர் என்பதால், தந்தையின் உடலை பரிசோதனை செய்தார். அப்போது முகத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் சந்தேகமடைந்தார்.

உடனே தனது தந்தையை அழைத்து சென்ற இம்ரான் பாஷாவிடம், என்ன நடந்தது என கேட்டார். அவர், அழுதபடி வலிப்பு ஏற்பட்டு மார்பு வலியால் துடித்தார். மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது என்றார். ஆனாலும் இம்ரான் பாஷா மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மஸ்தான் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே டாக்டர் ஷாநவாஸ், ‘எனது தந்தை இறப்பில் சந்கேதம் உள்ளது. அவரது முகத்தில் நகக்கீறலால் ரத்தக்காயங்கள் இருந்தது. இம்ரான் பாஷா மீது எங்கள் குடும்பத்திற்கு சந்தேகம் உள்ளது’’ என கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எனவே, தாம்பரம் துணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படையினர் மஸ்தானை காரில் அழைத்துச் சென்ற இம்ரான் பாஷாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவரது பதற்றமான பதிலால் சந்தேகமடைந்த தனிப்படையினர் இம்ரான் பாஷா மற்றும் மஸ்தான் செல்போன் சிக்னல்களை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தனர். அதில், இம்ரான் பாஷா காரில் மஸ்தானுடன் செல்லும் முன்பு, அடிக்கடி தமீம் மற்றும் நஷீர் என்பவருடன் பேசியது தெரிந்தது.

பிறகு மஸ்தான் கார் குரோம்ேபட்டையை தாண்டி செல்லும் போது, தாம்பரம் சானடோரியம் அருகே மஸ்தான் காரில் மேலும் 2 பேர் சென்றதற்கான செல்போன் சிக்னல் காட்டியது. இதனால் தனிப்படை போலீசாருக்கு இம்ரான் மீது சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது, செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லும் போது, 2 பேர் காரில் சோதனை என்ற பெயரில் ஏறினர். பிறகு சற்று தொலையில் இறங்கி ெசன்றனர் என இம்ரான் கூறினார்.

அதன்படி தனிப்படையினர் செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மஸ்தான் சென்ற காரில், சுங்கச்சாவடியில் யாரும் ஏறவில்லை என்பது உறுதியானது.

செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகள் அவர் கூறிய தகவலுக்கு முரணாக இருந்தது. எனவே, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, மஸ்தானை தனது நண்பர்கள் உதவியுடன் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து, இம்ரான் பாஷா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் தமீம் (எ) சுல்தான், நசீர், தவுபிக் அகமது, லோகேஷ்வரன் ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இம்ரான் பாஷாவிடம் நடத்திய விசாரணையின் போது அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: முன்னாள் எம்பி மஸ்தான் சகோதரன் மருமகன் இம்ரான் பாஷா.

பல் மருத்துவரான இவர், ராயப்பேட்டையில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். மஸ்தான் திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருப்பததால் அவர் மூலம் அரசு மருத்துவமனையில் பல் டாக்டராக பணியில் சேரலாம் என்று அடிக்கடி மஸ்தானை சந்தித்து வந்தார். இம்ரான் பல வகையில் மஸ்தானிடம் ரூ.15 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். மஸ்தான் கேட்ட உடன் பணம் தந்ததால் இம்ரான் எப்போதும் மஸ்தானுடன் இருந்து வந்துள்ளார். மஸ்தான் தனது மகன் திருமணத்திற்கு இம்ரானிடம் கொடுத்த ரூ.15 லட்சத்தை திரும்ப கேட்டுள்ளார். பல கோடி சொத்துகள் இருந்தும் தனக்கு கொடுத்த ரூ.15 லட்சத்தை வைத்துதான் அவரது மகனுக்கு திருமணம் செய்ய போகிறாரா என்று இம்ரான் புலம்பி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த இம்ரான், மஸ்தானிடம் வாங்கிய ரூ.15 லட்சம் கடன் குறித்து தனது சித்தி மகன் தமீம் (எ) சுல்தான் அகமதுவிடம் கூறியுள்ளார். அதற்கு தமீம் ‘மஸ்தானுடன் நீ தான் அடிக்கடி அவரை தனியாக காரில் அழைத்து செல்கிறாய். எனவே, அவரை யாருக்கும் சந்தேகம் வராதபடி கொலை செய்துவிட்டு, மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறி ஏமாற்றிவிடலாம்’ என்று கூறியுள்ளார். பின்னர், இம்ரான் தனது சித்தி மகன் தமீம் மற்றும் அவரது நண்பரான நஷீர் ஆகியோருடன் சேர்ந்து மஸ்தானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கான நேரத்திற்காகவும் காத்திருந்தனர். பிறகு மஸ்தான் திருச்சிக்கு திருமணம் அழைப்பிதழ் கொடுக்க காரில் தனியாக செல்வதை அறிந்த இம்ரான், மஸ்தானிடம் நான் உங்களுடன் வருகிறேன்.

காரை நான் ஓட்டுகிறேன் என்று கூறி அடம்பிடித்துள்ளார். திட்டமிட்டப்படி கடந்த 21ம் தேதி இரவு 9.30 மணிக்கு மஸ்தான் தனது காரில் திருச்சிக்கு புறப்பட்டார். திருச்சிக்கு புறப்படுவதற்கு முன்பு இம்ரான் தனது திட்டப்படி சித்தி மகன் தமீம் மற்றும் அவரது நண்பர் நஷீர் ஆகியோரை தாம்பரம் சானடோரியம் அருகே நிற்கும்படி போன் செய்து கூறியுள்ளார். பிறகு மஸ்தானுடன் இம்ரான் காரில் திருச்சி நோக்கி சென்றார். கார் தாம்பரம் சானடோரியம் அருகே வரும் போது, இம்ரான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ.15 லட்சம் பணத்தை செங்கல்பட்டு பகுதியில் உள்ள பைனான்சியர் ஒருவரிடம் கேட்டு இருக்கிறேன். அந்த பணத்தை இருவரும் வாங்கி கொண்டு திருச்சிக்கு செல்லலாம் என்று கூறியுள்ளார்.

அதற்கு மஸ்தான் இரவு நேரத்தில் யார் பணம் தருவாங்க என்று கூறியுள்ளார். உடனே, பைனான்சியர்கள் எந்த நேரத்திலும் பணம் தருவார்கள் என்று கூறியுள்ளார். பிறகு பணத்தை வாங்கிக்கொண்டு செல்லலாம் என்று கூறி இருவரும் சென்றுள்ளனர். பிறகு காரை தாம்பரம் சானடோரியம் அருகே இம்ரான் நிறுத்தினார். உடனே மஸ்தான், இங்கு ஏன் காரை நிறுத்துகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு இம்ரான், பைனான்சியரிடம் ரூ.15 லட்சம் பணத்தை வாங்கும் போது, சாட்சி கையெழுத்து போட எனது சித்தி மகன் தமீம் மற்றும் அவரது நண்பர் நஷீரை அழைத்து செல்லலாம். பணத்தை வாங்கிய உடன் அவர்கள் சென்றுவிடுவார்கள். நாம் இருவரும் திருச்சி செல்லலாம் என்று கூறி, இருவரையும் காரில் இம்ரான் ஏற்றியுள்ளார்.

கார் செங்கல்பட்டு சுங்கச்சாவடி தாண்டி செல்லும் போது, திடீரென இம்ரான் காரை யாரும் இல்லாத இடத்தில் நிறுத்தினர். அப்போது காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த நஷீர், ‘மஸ்தானின் இரண்டு கைகளையும் பின் பக்கமாக இறுக்கமாக பிடித்துள்ளார்’. அப்போது தமீம், மஸ்தான் முகத்தை துண்டு ஒன்றால் மூடியபடி, தனது கையால் மஸ்தான் வாய் மற்றும் மூக்கை அழுத்தி பிடித்து மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர். அப்போது இம்ரான் மஸ்தானின் இரண்டு கால்களை அழுத்தமாக பிடித்துள்ளார். மஸ்தானை 3 பேரும் மூச்சு திணறடித்த போது, மஸ்தான் உயிருக்கு போராடி துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

 பிறகு யாருக்கும் தெரியாதபடி தமீம் மற்றும் நஷீர் ஆகியோர், நண்பர்களான தவுபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் எடுத்து வந்து மற்றொரு காரில் ஏறி சென்றுவிட்டனர். மஸ்தானை ரூ.15 லட்சம் பணத்திற்காக சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு திட்டமிட்டு ஓடும் காரில் கொலை செய்துள்ளனர். பின்னர், இம்ரான் திட்டமிட்டபடி, மஸ்தான் வீட்டிற்கு போன் செய்து, காரில் செல்லும் போது வலிப்பு ஏற்பட்டு மார்பு வலியால் துடித்து மயங்கி விட்டார் என்றும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து பார்த்த போது அவர் இறந்துவிட்டதாக கூறி அழுது நடித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட இம்ரான் பாஷா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளியே வந்த கொலை : 
முன்னாள் எம்பி மஸ்தான் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உடலை குடும்பத்தினர் கடந்த 22ம் ேததி அடக்கம் செய்தனர். அதன் பிறகு மஸ்தான் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், மஸ்தான் மாரடைப்பால் இறக்கவில்லை. அவர் மூச்சு திணறடிக்கப்பட்டுள்ளார். அதனால் மஸ்தான் மூச்சுவிட கடுமையாக போராடி கடைசியாக உயிரிழந்துள்ளார். இது இயற்கையான சம்பவம் அல்ல. செயற்கையாக மூச்சு திணறடிக்கப்பட்ட சம்பவம் என கூறப்பட்டிருந்தது. குற்றவாளி இம்ரான் பாஷா மஸ்தான் குடும்பத்தினரை நாடகமாடி மாரடைப்பு என்று நம்ப வைத்தது பிரேத பரிசோதனை அறிக்கையால் தெரியவந்தது.

மஸ்தானின் கடைசி இரண்டரை மணி நேரம் :

மஸ்தான் தனது வீட்டில் இருந்து கடந்த 21ம் தேதி இரவு 9.30 மணிக்கு காரில் புறப்பட்டுள்ளார். கார் தாம்பரத்தை 10.15 மணிக்கு கடந்துள்ளது. பிறகு செங்கல்பட்டு சுங்கச்சாவடியை 11 மணிக்கு கடந்துள்ளனர். கொலை 11 மணி முதல் 11.20 மணிக்குள் நடந்துள்ளது. மஸ்தான் உடலை கூடுவாஞ்சேரி மருத்துவமனைக்கு 12 மணிக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னாள் எம்பி மஸ்தானை வீட்டில் இருந்து புறப்பட்ட இரண்டரை மணி நேரத்திற்குள் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:
#எம்பிமஸ்தான்  # வாக்குமூலம்  # கொலை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..