அதிமுக ஆட்சியில் ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 236 பேர் அதிரடி டிஸ்மிஸ்: தமிழக அரசு உத்தரவு..!!

அதிமுக ஆட்சியில் ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 236 பேர் அதிரடி டிஸ்மிஸ்: தமிழக அரசு உத்தரவு..!!
By: TeamParivu Posted On: January 04, 2023 View: 68

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மதுரை, திருச்சி, தஞ்சை, திருப்பூர், விருதுநகர், நாமக்கல் உட்பட ஆவின் நிறுவனங்களில் முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை நீக்கம் செய்து, ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

மதுரையில் 47 பேர், திருச்சியில் 40 பேர் உட்பட தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனங்களில் மோசடியாக பணிகளில் சேர்ந்த 236 பேர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை உருவானது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அறையை கடந்து சென்றவர்களைக் கூட வாங்க வாங்க என்று அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்று பணம் கொடுத்தால் வேலையை முடித்துக் கொடுக்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை கை மீறி போயிருந்தது.

அதன்படி கடந்த 2019-20ம் ஆண்டில், அதிமுக ஆட்சியின் போது மதுரை ஆவினில், மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவியாளர்கள், டிரைவர் என 61 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வு கட்டணத்தை வங்கிகளில் எடுக்கப்பட்ட வரைவு காசோலைகள் மூலம் செலுத்தினர். ஆனால் இவர்களில் பலர் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. இந்த நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை என்றும், தங்களுக்கு தேவையான நபர்களை தனியாக அழைத்து, ஆவின் நிறுவன அதிகாரிகள் தேர்வு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடிக்காக முறையாக விண்ணப்பித்தவர்கள் கொடுத்த வங்கி டிடிக்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது. முறைப்படி விண்ணப்பித்த பலரை நேர்காணலுக்கு அழைக்கவே இல்லை என்பதும் பின்னர் நடந்த விசாரணைகளில் அம்பலமானது.

இதுதொடர்பாக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து ஆதாரங்களுடன் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. கடந்த ஆட்சியின் போது உயர் அதிகாரிகள், இந்த புகார்களை கண்டுகொள்ளவில்லை. பெயரளவில் விசாரணை நடத்தினர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், ஆவின் நிர்வாக இயக்குநராக சுப்பையன் நியமிக்கப்பட்டார். அவர் நேரடியாக ஆவின் நிறுவனங்களின் அனைத்து கிளைகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து நிர்வாக இயக்குநர் சுப்பையனின் உத்தரவின் பேரில் சென்னை தணிக்கைப் பிரிவு இணை இயக்குனர் குமரேஸ்வரி தலைமையில் உதவி இயக்குநர்கள் (தணிக்கை) குழுவினர், தென் மாவட்டங்களில் உள்ள ஆவின் நிறுவனங்களில் நடந்த முறைகேடுகளை கண்டறிய கடந்த ஆண்டு மதுரையில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆவினில் பணி நியமனங்களில் நடந்த மோசடிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்த நியமனங்களின் போது ஆவின் மேலாளராக (நிர்வாகம்) இருந்த காயத்ரியிடம் (தற்போது திண்டுக்கலில் உள்ளார்) இக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், ‘இப்பணி நியமனத்திற்கு 2019 ஜூனில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலை 17 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களில், 25க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை காணவில்லை. மேலும் எவ்வித ஆவணமும் இல்லாமல் சிலரின் விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அந்த விண்ணப்பங்களுடன் முறையாக விண்ணப்பித்திருந்தவர்கள் கொடுத்த ‘வங்கி டிடி’க்களை இணைத்து மோசடி நடந்துள்ளது’ என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் பலருக்கு நேர்காணல் கடிதம் அனுப்பப்படவே இல்லை. தனியார் கொரியர் மூலம் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, தனியாக நேர்காணல் கடிதங்களை அனுப்பிய முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பலர், இந்த மோசடிகள் மூலம் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அருப்புக்கோட்டையில் ஒரே பகுதியை சேர்ந்த 17 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். அவர்கள் எழுத்து தேர்வின் போது பெற்ற மதிப்பெண்கள், விடைத்தாள்களை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இந்த ஆவணங்களை கைப்பற்றிய குழுவினர், அவற்றை நிர்வாக இயக்குநர் சுப்பையனிடம் வழங்கினர். இதன் அடிப்படையில் விஜிலன்ஸ் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான விஜிலென்ஸ் குழுவும் விசாரணை துவக்கியது. ‘டிடி’க்கள் மோசடி குறித்து மேலாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜிலென்ஸ் குழு விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை நிர்வாக இயக்குநரிடம் வழங்கினர். இந்த அறிக்கையின் அடிப்படையில், ‘கடந்த 2020ம் ஆண்டில் மதுரை ஆவினில் இனசுழற்சி முறையை பின்பற்றாமலும், பணி நிலைத்திறன் பட்டியல் அங்கீகரித்துப் பெறப்படாமலும், நிர்வாக நடைமுறை விதிமீறல்கள் நடந்துள்ளது.

இதனால் அப்போது, ஆவினில் நிர்வாக மேலாளராக இருந்த காயத்ரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணியில் நியமிக்கப்பட்ட 47 பேரின் பணி நியமனம் ரத்து செய்யப்படுகிறது’ என்று ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதே போல் தஞ்சாவூர் ஆவினில் 8 பேரும், திருச்சி ஆவினில் 40 பேரும், திருப்பூரில் 26 பேரும், விருதுநகரில் 26 பேரும், நாமக்கல்லில் 16 பேரும் மற்றும் தேனி ஆவினில் 38 பேரும் என மொத்தம் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடுகளுக்கு காரணமாக இருந்த ஆவின் பணியாளர்கள் 26 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் ஆவின் செயல் அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் திருப்பூர், தேனி மற்றும் விருதுநகர் ஆவின் நிர்வாகக் குழுக்கள் கலைக்கப்படுகின்றன என்றும் அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:
#அதிமுக  # ஆவின்  # பணிநீக்கம்  # மோசடி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..