திருக்கோயில்களின் பசுமடங்களில் கன்றுகளை பராமரிக்க கன்று பாதுகாப்பு பெட்டகம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!

திருக்கோயில்களின் பசுமடங்களில் கன்றுகளை பராமரிக்க கன்று பாதுகாப்பு பெட்டகம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!
By: TeamParivu Posted On: January 06, 2023 View: 72

திருக்கோயில்களின் பசுமடங்களில் கன்றுகளை பராமரிக்க கன்று பாதுகாப்பு பெட்டகங்களை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சேகர்பாபு ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து  திருக்கோயில்களில் செயல்பட்டு வரும் பசுமடங்களிலுள்ள கன்றுகளின் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கன்று பாதுகாப்பு பெட்டகங்களை இன்று நங்கநல்லூர், அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் பசுமடத்தில் மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,  மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வழங்கி  தொடங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, ஆறறிவு படைத்த ஜீவராசிகளுக்கும், வேண்டியதைக் கேட்க முடியாமல் இருக்கின்ற ஜீவராசிகளுக்கும் மகத்துவமான முதல்வராக திகழ்கின்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் கன்று பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களின் கட்டுப்பாட்டிலுள்ள 121 பசுமடங்களில் 3000 மேற்பட்ட கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெறும் கால்நடைகளை பராமரிக்க பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த பசுமடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை பேணி காப்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர், 2021-2022 மற்றும் 2022-2023 சட்டமன்ற அறிவிப்புகளில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.

இந்த நிதியின் மூலம் பசுமடங்கள் செம்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. நங்கநல்லூர், அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் அமைந்திருக்கின்ற இந்த பசுமடத்தில் 26 பசுக்கள் மற்றும் கன்றுகள் உள்ளன. கன்றுகளின் இறப்பை தடுக்கும் வகையிலும் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் இன்றைய தினம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் கன்று பாதுகாப்பு பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பெட்டகத்தில் மினரல் மிக்சர், கன்றுகளுக்கான பூச்சி மருந்து, ஓ.ஆர்.எஸ், தனிமங்கள் நிறைந்த உப்புக் கட்டி மற்றும் முதலுதவிப் பெட்டி போன்றவை உள்ளன. இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கின்ற இந்து சமய அறநிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 121 பசுமடங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன் இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப, இணை ஆணையர்கள் திரு.அர.சுதர்சன், திருமதி கே. ரேணுகா தேவி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை உற்பத்தி கல்வி மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ். மீனாட்சி சுந்தரம், திருக்கோயில் பசுமடங்களின் ஆலோசகர் திரு.எஸ்.ஏ. அசோகன், திருக்கோயில் செயல் அலுவலர் திரு.அருட்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.    

Tags:
#திருக்கோயில்  # பாதுகாப்புபெட்டகம்  # அறநிலையத்துறை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..