பயிர் காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.318.30 கோடி இழப்பீட்டு தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்..!!

பயிர் காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.318.30 கோடி இழப்பீட்டு தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்..!!
By: TeamParivu Posted On: January 10, 2023 View: 69

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு 318.30 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-2022ம் ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட குளிர் பருவ (ரபி) பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக சுமார் 2.02 இலட்சம் விவசாயிகளுக்கு 284 கோடி ரூபாயும், 2022-2023ம் ஆண்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் சுமார் 19,282 விவசாயிகளுக்கு 34.30 கோடி ரூபாயும், என மொத்தம் 2.21 இலட்சம் விவசாயிகளுக்கு 318.30 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக ஐந்து விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

2021-2022ஆம் ஆண்டு குளிர் பருவ (ரபி) பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக 276.85 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் 152 கோடி ரூபாயும், இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம்
132 கோடி ரூபாயும், என மொத்தம் 284 கோடி ரூபாய் தற்போது இழப்பீட்டுத் தொகையாக சுமார் 2.02 இலட்சம் விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் 80,357 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர் பாதிப்படைந்தது. 2022-2023 ஆம் ஆண்டில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அறிவிக்கை செய்யப்பட்ட 277 வருவாய் கிராமங்களுள், 87 வருவாய் கிராமங்களில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில், சுமார் ஒரு மாதம் வயதுடைய சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்தது.

பயிர் காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின்படி, 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்ட 87 வருவாய் கிராமங்கள் விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு செய்த நடப்பு ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கிட ஏதுவாக, 39,142 ஏக்கர் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.8,762 வீதம் சுமார் 19,282 விவசாயிகளுக்கு 34.30 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சுமார் 2.21 இலட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 318.30 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இப்பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று ஐந்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சிந்தனைசெல்வன், திரு. எம். பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அரசுச் செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் மரு. இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் திரு. பி. பிரபாகர், இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் திரு.சிவராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:
#பயிர்காப்பீடு  # இழப்பீட்டுதொகை  # முதலமைச்சர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..