பொங்கல் அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ புறக்கணிப்பு: அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம்..!!

பொங்கல் அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ புறக்கணிப்பு: அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம்..!!
By: TeamParivu Posted On: January 11, 2023 View: 74

சட்டப்பேரவையில் தமிழ்நாடு மற்றும் தலைவர்களை பற்றி பேசாமல் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது பொங்கல் விருந்து அழைப்பிதழிலும் தமிழ்நாடு என்பதையும், அரசின் இலட்சினையையும் புறக்கணித்துள்ளதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அவரைக் கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். மேலும், தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதில் தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டு இருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசால் அச்சடிக்கப்பட்டு வழங்கிய புத்தகத்தில் இடம்பெற்று இருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் ஆட்சி, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் பெயர்களையும் வாசிக்கவில்லை. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்றுக் கொண்டிருந்தபோதே, முதல்வர் மு.க.ஸ்டாலினால் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் வரும் 12ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய விஐபிக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே 2022ம் ஆண்டு நடந்த சித்திரை விழாவுக்கு வழங்கிய அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்றிருந்த நிலையில், தற்போது ‘தமிழக ஆளுநர்’ என்று உள்ளது.

அதாவது, அழைப்பிதழில் 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொங்கல் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, லட்சுமி ரவி அன்புடன் அழைக்கிறார்கள் என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முத்திரை சின்னத்தில் தமிழ்நாடு என்றும், வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் முகப்பும் இடம்பெற்றிருப்பதால், மாநில அரசின் சின்னம் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. 

அதற்கு பதிலாக ஒன்றிய அரசின் முத்திரை சின்னமான 3 பக்கம் திரும்பி நிற்கும் 3 சிங்கங்கள் இருக்கும் சின்னம் இடம் பெற்று உள்ளது. அதேநேரம், கடந்த ஆண்டு சித்திரை திருநாள் அழைப்பிதழில் ஆளுநர் அனுப்பிய தேநீர் விருந்து அழைப்பிதழில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்று அச்சிடப்பட்டு இருந்தது. அதேபோன்று தமிழ்நாடு அரசு முத்திரை சின்னமும் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு அழைப்பிதழில், தமிழ்நாடு ஆளுநர் என்றும், தமிழ்நாடு அரசின் முத்திரையுடன் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழக ஆளுநர் என்றும், ஒன்றிய அரசின் முத்திரையையும் அழைப்பிதழில் அச்சிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த பொங்கல் விழா கொண்டாட்ட அழைப்பிதழை எம்.பி. சு.வெங்கடேசன் டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். அதில் அவர், ‘‘சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரைப்போல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், ஆளுநரின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அரசியல்கட்சி தலைவர்கள் முதல் மாணவர்கள் வரை ஆர்.என்.ரவியின் செயல்பாட்டை கண்டித்து போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மெரினா காமராஜர் சாலையில் மாநில கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ‘தமிழ்நாடு எங்கள் நாடு... புறக்கணிக்காதே’, ‘வெளியேறு வெளியேறு தமிழகத்தை விட்டு வெளியேறு’ என்று முழக்கம் எழுப்பியபடி தமிழக ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்களுடன் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். பிறகு கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மாணவர்களின் போராட்டத்தால் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

அதேபோல், வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி அருகே ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் எழும்பூர் பகுதி சயெலாளர் ரஞ்சித் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி தேசிய முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர். 

அதேபோல திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதேபோல் கோவை, திருப்பூர், திருவண்ணாமலை திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கடலூர் என மாநில முழுவதும் ஆளுநர் உருவபொம்மை எரித்து மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Tags:
#கவர்னர்  # தமிழ்நாடுபுறக்கணிப்பு  # தலைவர்கள்  # ஆர்என்ரவி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..