24 மணி நேரமும் புகார் செய்ய தனி எண்கள் அறிவிப்பு; தமிழ்நாட்டில் நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளோம்: வடமாநில தொழிலாளர்கள் பேட்டி..!!

24 மணி நேரமும் புகார் செய்ய தனி எண்கள் அறிவிப்பு; தமிழ்நாட்டில் நாங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளோம்: வடமாநில தொழிலாளர்கள் பேட்டி..!!
By: TeamParivu Posted On: March 05, 2023 View: 40

தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

திருப்பூரில் வேலை செய்த பீகாரை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் (37). இவர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி பலியானார். அவரை சிலர் கொன்று தண்டவாளத்தில் வீசியதாக வடமாநில தொழிலாளர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து, திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சஞ்சீவ்குமார் விபத்தில் பலியான சிசிடிவி காட்சிகளை காண்பித்தபின் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் சிலர் கலவரவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கததோடு சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது மற்றும் அச்சுறுத்துவது போன்று வீடியோக்களை வெளியிட்டனர். இதனால் அச்சம் அடைந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல திருப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா இந்தியில் வீடியோவில் பேசியதாவது:

திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பீகார், ஓடிசா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வடமாநில தொழிலாளர் வேலைசெய்து வருகிறார்கள்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய முறையில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எனவே அச்சம் அடைய தேவை இல்லை. வட மாநில தொழிலாளர்களுக்காக பிரத்யேகமாக கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும். 9498101300 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிலையில், வடமாநிலங்களில் வரும் 7-ம்தேதி ேஹாலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. குடும்பத்துடன் இப்பண்டிகையை கொண்டாட ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் குவிந்து வருகிறார்கள்.

அவர்களிடம் கேட்டபோது, ேஹாலி பண்டிகை கொண்டாட கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ரயில்களில் டிக்கெட் புக் செய்து விட்டோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. 10 நாட்கள் கழிந்து மீண்டும் நாங்கள் இங்கு வந்துவிடுவோம் எனக்கூறினர். விழிப்புணர்வு பிரசாரம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து புகார் இருந்தால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பொது மேலாளரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் உதவி செய்ய தயாராக இருக்கிறது என்றார்.

பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஈரோடு எஸ்.பி. சசிமோகன் பேசுகையில், சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல்கள், செய்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது புகார்களை, ஈரோடு மாவட்ட போலீஸ் உதவி எண்: 96552 20100 ல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் பிளாஸ்டிக் மறுசுழற்சியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த அச்சங்கத்தின் தலைவர் சித்திக் கூறுகையில், பீகார் மாநிலத்தில் உள்ள பாஜவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழகத்தில் இருக்கும் பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவதாக கூறியுள்ளார்.

அது உண்மை கிடையாது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். ஈரோட்டில் 120-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில், 25 ஆயிரம் வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டால் தமிழகத்தில் தொழில்துறை முடங்கும், எனவே, முதல்வர் வடமாநிலத்தவர்கள் பிரச்சனையை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சீமானை கைது செய்ய வலியுறுத்தல்: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று திருப்பூரில் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசி வரும் சீமானை கைது செய்ய வேண்டும்.

போலீசார் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். வதந்தி பரப்புகிறவர்களை கைது செய்ய வேண்டும் என்றார். கோவை தொகுதி எம்.பி பி.ஆர்.நடராஜன் அளித்த பேட்டியில், சில தொழிலாளர்கள் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊர் போகிறார்கள். இதை வைத்து பாஜவினர் தான் சமூக வலைதளங்கள் மூலமாக பிரச்னை கிளப்பி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் கோவையில் வேலை செய்வதற்கு விருப்பத்துடன் வருகிறார்கள். அவர்களை யாரும் தொந்தரவு செய்யாத நிலையில் எதற்கு இதுபோல் தேவையற்ற தகவல்களை பரப்புகிறார்கள் என தெரியவில்லை என்றார்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள், தனி மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், கோவை நகரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இந்தி பேச தெரிந்த போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை நகரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் எதாவது பிரச்னை என்றால் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பாஜ நிர்வாகியை கைது செய்ய தனிப்படை டெல்லி விரைவு :

வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி பாஜ நிர்வாகி பிரசாந்த் உமா ராவ் உள்பட 4 பேர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, மிரட்டல் விடுப்பது, கலவரத்தை தூண்டுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து தென்மண்டல ஐஜி ஆஸ்ராகர்க், நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன், எஸ்ஐ முருகவேல் உள்பட 7 பேர் கொண்ட தனிப்படையினர் பிரசாந்த் உமாராவை கைது செய்ய புதுடெல்லி விரைந்துள்ளனர்.

பொய் தகவல் பரப்பியவரை பிடிக்க பீகார் சென்றது சிறப்பு குழு : 

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கோவை மாநகரில் இன்று (நேற்று) பொய்யான தகவலை பரப்பியது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தி நாளிதழில் பீகார் முதல்வர் கூறியதாக வெளிவந்த செய்தி என பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவினர் பீகார் சென்றுள்ளனர். தவறான தகவலை பரப்பிய நபரை கண்டறியும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. வதந்திகளை பரப்பினால் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பொய் தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

* அனில்: திருப்பூரில் நான் 7 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகிறேன். இதுவரை எந்த பிரச்சனையும் வந்ததில்லை.

* ராம் பிரசாத்: திருப்பூரில் நான் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. இங்கு வேலைக்கு வந்த பிறகு எனது வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என தகவல் பரவி வருகிறது. அது தவறு, தொழிலாளர்கள் பாதுகாப்புடன் வேலை செய்து வருகிறோம்.

* அனிமா உகாஜன்: திருப்பூர் தான் எங்களை வாழ வைத்து வருகிறது. ஆனால் தற்போது சிலர் வடமாநில தொழிலாளர்களை தாக்குவதாக தெரிவித்து வருகிறார்கள். அப்படி எந்த சம்பவமும் நாங்கள் வேலை பார்க்கிற நிறுவனம் மற்றும் நாங்கள் தங்குகிற பகுதிகளில் நடைபெறவில்லை.

* நவீன்: அனைத்து நிறுவனங்களிலும் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் வேலை செய்து வருகிறார்கள்.

* சுஷ்மா நிர்த்தா: வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கான பேர்கள் திருப்பூரில் வேலை செய்து வருகிறார்கள். ஏதோ ஒரு சில பகுதிகளில் நடைபெறும் சம்பவங்களை வைத்து, வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என பலரும் தெரிவித்து வருகிறார்கள். 

இதேபோன்று கோவை, ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நாங்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளோம் என்றனர்.

Tags:
#வடமாநில  # தொழிலாளர்கள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..