இளைஞர்கள், மாணவர்களிடையே ஜாதி மோதல்களை தூண்டும் வாட்ஸ்அப் குழுக்கள் மீது சட்ட நடவடிக்கை: காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!

இளைஞர்கள், மாணவர்களிடையே ஜாதி மோதல்களை தூண்டும் வாட்ஸ்அப் குழுக்கள் மீது சட்ட நடவடிக்கை: காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!!
By: TeamParivu Posted On: March 06, 2023 View: 61

சமூக ஊடகங்கள் மூலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஜாதி மோதல்களை  தூண்டும் வகையில் செயல்படும் நபர்களையும், வாட்ஸ்அப்  குழுக்களையும் கண்காணித்து உடனுக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுடனான சட்டம் - ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டங்களில் நிலவிவரும் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை தென்மாவட்டங்களில், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது என்பது மிக, மிக முக்கியமான பணியாகும். தென்மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை உயர் அலுவலர்களாகிய நீங்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி சட்டம் - ஒழுங்கை சீராக பராமரிக்க வேண்டும்.

காவல்துறை அலுவலர்கள் தடுப்புப்பணிகள், ரோந்துப்பணிகள் ஆகிய அடிப்படை காவல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதின் மூலம், அதனை குறைக்க முடியும்.

இதனை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களுக்கு காரணமானவர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது உங்கள் கடமை. இவ்வகை குற்றங்களில் பெரும்பாலும் ஏமாற்றப்படுவது எளிய, நடுத்தர வர்க்கத்து மக்கள். ஆகவே,  தொழில்நுட்ப பிரிவுகளின் திறனை கூர்மைப்படுத்தி இதனை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். சமூக ஊடகங்கள் மூலமாக ஜாதி மோதல்களை தூண்டும் வகையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே அத்தகைய எண்ணங்களை தூண்டும் வகையில் செயல்படும் நபர்களையும், வாட்ஸ்அப் குழுக்களையும் கண்காணித்து உடனுக்குடன் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  எந்தக்காரணம் கொண்டும் உங்கள் பகுதிக்குள் ஜாதிரீதியான உரசல்களோ, பிரச்னைகளோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது போலீசாரின் கடமையாகும்.

களநிலவரம் முழுமையாக போலீசாரின்  கையில் இருக்கவேண்டும். தொடர்ந்து கள ஆய்வில் ஈடுபட்டு காவல்நிலையங்களை திடீர் தணிக்கை செய்து சார்நிலை அலுவலர்களின் பணியினை தொடர்ந்து கவனித்து மேற்பார்வையிட்டால்தான் கோட்டம் அல்லது சரகம் முழுமையாக போலீஸ் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவேதான், களப்பணியின் முக்கியத்துவத்தை நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறேன். இன்றைய ஆய்வில் குறிப்பிடப்பட்ட மற்றுமொரு முக்கியமான விபரம், தண்டனை விகிதம் அதாவது கன்விக்சன் ரேட்.  நான் எப்போதும் குறிப்பிடுவது போல், புகாரை பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்தால் மட்டும் நம் கடமை முடிந்துவிடாது.  அதனை, விரைந்து விசாரித்து, நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே முழுமையாக போலீசார் தங்கள் பணியினை செய்து முடித்ததாக கருதப்படும்.

அப்போதுதான் பொதுமக்களுக்கும் காவல்துறையின் மீது பெரும் மதிப்பு உண்டாகும்.  இதற்காக நீங்கள் நீதித்துறையுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். சாலை விபத்துகள், விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோவது, பெரும் வேதனைக்குரிய நிகழ்வாகும். எனவே, சாலை பாதுகாப்புப்பணிகளில் பொதுமக்களுடன் இணைந்து, விழிப்புணர்வு பிரசாரங்களை விரிவுபடுத்த வேண்டும். அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அப்பகுதிகளில் மீண்டும் விபத்து ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எனது விருப்பம். இப்பணியில் நீங்கள் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களையும், என்எஸ்எஸ், என்சிசி போன்ற மாணவ அமைப்புகளையும் பெருமளவு ஈடுபடுத்த வேண்டும்.

தென்மாவட்டங்களை பொறுத்தவரை, போதைப்பொருள் ஒழிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய இம்மாவட்டங்களில் இளைஞர்களை போதைப்பொருள் என்ற தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் பெரிய வியாபாரிகளை, போதைப்பொருள் கடத்துபவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்கவேண்டும். இதனை, காவல்துறை தலைவரும், தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.எனது முந்தைய காவல்துறை ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்ததை இங்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

காவல்துறை என்பது ஏழை, எளிய மனிதர்களின் பாதுகாவலனாக, அவர்களது உயிருக்கும், உடமைக்கும் எந்நாளும் துணை நிற்பவர்களாக செயல்படவேண்டும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை நினைவில் கொண்டு காவல்நிலையத்திற்கு வரும் எவராக இருந்தாலும், எளியவர், உயர்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்குரிய மரியாதையினை தந்து அவர்களது குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல்நிலையம் என்பது, எளிய மனிதர்கள், பெண்கள், சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்கள் என எல்லோரும் எவ்வித தயக்கமும் இன்றி வந்து புகார் அளிக்கக்கூடிய ஒரு இடமாக இருக்கவேண்டும்.

இதற்காக, உங்கள் சார்நிலை அலுவலர்களாகிய காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியவர்களுக்கு தக்க அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குங்கள். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்லுக்கேற்ப, நாம் செயல்படவேண்டும். சிறப்பான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், குற்றங்கள் நிகழ்ந்த பிறகு அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல், புகார் தெரிவிக்க வரும் மக்களிடம் பரிவோடு நடந்து கொள்ளுதல் ஆகியவையே சிறந்த காவல் பணிக்கு இலக்கணமாகும். அவற்றை, நீங்கள் ஒவ்வொருவரும் மேற்கொண்டு தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் சட்டம் - ஒழுங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து உறுதிசெய்ய வேண்டும்.

உங்கள் சிறப்பான பணிக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சங்கர், கலெக்டர்கள் அனீஷ்சேகர் (மதுரை), ஜானி டாம் வர்கீஸ் (ராமநாதபுரம்), விசாகன் (திண்டுக்கல்), மதுசூதன் ரெட்டி (சிவகங்கை), ஷஜீவனா (தேனி), தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், டிஐஜிக்கள் அபினவ் குமார், துரை, எஸ்பிக்கள் சிவபிரசாத், டோங்கரே பிரவீன் உமேஷ், பாஸ்கரன், தங்கதுரை, செல்வராஜ் மற்றும் காவல்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:
#இளைஞர்கள்  # வாட்ஸ்அப்குழுக்கள்  # ஜாதிமோதல்  # முதல்வர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..