மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றம்..!!

மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றம்..!!
By: TeamParivu Posted On: March 10, 2023 View: 72

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

தமிழகத்தின் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை (பட்ஜெட்) வருகிற மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கிய அறிவிப்புகளை வருகிற பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 

அமைச்சரவை கூட்டத்தில், மார்ச் மாதம் 20ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம், அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முக்கியமாக, திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட மகளிர் உரிமைத்தொகையாக பெற தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது உள்ளிட்ட சில அறிவிப்புகளை மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை, ஆளுநர் தமிழக அரசிடம் கேட்டார். அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பினார். இதற்கு, ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் தடை மசோதாவை வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு சட்ட அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இணையவழி சூதாட்டங்களை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுக்களை முறைபடுத்துவது குறித்து சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அவர் சில சந்தேகங்களை கேட்டபோது தெளிவான விளக்கம் தந்தோம். ஆனால், இன்றைய தினம் 6ம் தேதி சட்டப்பேரவையில் சட்டம் ஏற்றுவதற்கு தமிழகத்துக்கு அதிகாரம் இல்லை என்று திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த அதிமுக அரசு இதே சட்டத்தை இயற்றியபோது நீதிமன்றம், இந்த சட்டத்தில் உள்ள பல்வேறு குறைகளை காட்டி நிவர்த்தி செய்து புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சொல்லி தீர்ப்பு தந்தது. நீதிமன்றமே சட்டமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதிகாரம் இல்லை என்கிறார். இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. 

ஆன்லைன் விளையாட்டு, ஆப்லைன் விளையாட்டு என இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம். ஆளுநர், குறிப்பிட்டதுபோல் 33வது பிரிவின் கீழ் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. இது ஆப்லைன் விளையாட்டுக்காக அல்ல. ஆன்லைன் விளையாட்டுக்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆப்லைன் என்பது நேரடியாக ஆட்கள் விளையாடுவது. அங்கு தவறு நடப்பதற்கு இடம் கிடையாது. ஆன்லைன் ஒரு புரோகிராம். அதில் தவறு நடக்கும். 

இதுபோன்ற விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது குறித்து இன்று (நேற்று) அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனால், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார், நாங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்ற அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறோம். சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் புதிய கருத்துக்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆளுநர் திரும்ப திரும்ப ஒரே கருத்தை தான் சொல்லி இருக்கிறார். 

நீதிமன்றத்துக்கு நாங்கள் போக வேண்டிய அவசியமே இல்லை. காரணம், ஏற்கனவே எங்களுக்கு சட்டம் இயற்ற நீதிமன்றம் அதிகாரம் தந்துள்ளது. அதற்கு பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, பொதுமக்களிடம் கருத்து கேட்டுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2வதாக சட்டம் இயற்ற எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. 2வது முறையாக சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பும்போது அவரால் நிராகரிக்க முடியாது. இது பொதுமக்களை காப்பாற்ற, பாதுகாக்க கொண்டு வந்த சட்டம். நாங்கள் கண்துடைப்புக்காக இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை. வரக்கூடிய சட்டமன்றத்தில் இந்த சட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும். 2வது முறையாகவும் ஆளுநர் கிடப்பில் போட்டால் அதற்கு பிறகு பார்க்கலாம்.

* ஆளுநர் ஆர்.என்.ரவியா? அண்ணாமலையா? ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநருக்கு சரியாக விளக்கம் தமிழக அரசு கொடுக்கவில்லை என்று அண்ணாமலை கூறியதாக கேட்கிறீர்கள். ஆளுநர் கேட்ட விளக்கங்களை நேரடியாக சென்று தந்திருக்கிறோம். இன்று தமிழ்நாடு ஆளுநர் அண்ணாமலையா, ஆர்.என்.ரவியா? ஆளுநர் எங்களிடம் என்ன விளக்கம் கேட்டார் என்று அண்ணாமலைக்கு என்ன தெரியும். அண்ணாமலையிடம் ஆளுநர், இதுபோன்ற விளக்கங்கள் தரவில்லை என்று சொன்னாரா? இதுபோன்ற ரகசியங்களை அண்ணாமலையை கூப்பிட்டு ஆளுநர் மாளிகையில் விவாதித்துக் கொண்டிருக்கிறாரா? இந்த 4 மாதத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டால் தமிழ்நாடு அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. ஒன்றிய அரசுக்கு வருமானம் வருகிறதா என்று எங்களுக்கு ெதரியாது. 

எந்த உலகத்திலேயேயாவது ஒருவர் மீது புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவர்களையே கூப்பிட்டு பார்ப்பார்களா? ஆனால் ஒரு ஆளுநர் வந்து வெளிப்படையாக இல்லாமல் ரகசியமாக ஆன்லைன் விளையாட்டை நடத்துபவர்களை சந்தித்ததாக ஒரு தகவல் இருக்கிறது. ஆன்லைன் தடை மசோதாவை ஆளுநர் எதற்காக திருப்பி அனுப்பினார் என்பது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டியதுதான். இதை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு தடை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

Tags:
#சட்டப்பேரவை  # அமைச்சரவைகூட்டம்  # முதல்வர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..