போலி செய்திகள் மற்றும் வெறுப்பு செய்திகளை கண்டறிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு..!!

போலி செய்திகள் மற்றும் வெறுப்பு செய்திகளை கண்டறிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: March 31, 2023 View: 71

போலி செய்திகள் மற்றும் வெறுப்பு செய்திகளை கண்டறிவது தொடர்பாக பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியதும் வினாக்கள் விடை நேரம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பக்கூடிய கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி மற்றும் பிற கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் பின்னர் இன்றைய மானிய கோரிக்கையான பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறையில் 26 புதிய அறிவிப்புகளை அம்மைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.

26 புதிய அறிவிப்புகள்:

1.) வரும் கல்வி ஆண்டில் சுமார் 150 கோடி மதிப்பில் 7500 அரசு தொடக்கப்பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

2.) உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் 296 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் 175 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

3.) 13 மாவட்டங்களுக்கு மாதிரி பள்ளிகள் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரி பள்ளி என உருவாக்கப்படும். இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

4.) அரசு பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் சுமார் 10 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

5.) ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.

6.) தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக “தமிழ் மொழி கற்போம்” என்ற திட்டம் தொடங்கப்படும்.

7.) அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தப்படும். இதற்கென சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

8.) 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என குறைந்தபட்சம் ஐந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்.

9.) அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 35,847  பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்திற்கு சுமார் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

10.) வரலாறு, வணிகவியல் போன்ற பாடப் பிரிவுகள் இல்லாத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிப்படியாக மூன்றாம் பாடப்பிரிவு உருவாக்கப்படும்.

11.) உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன், விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு என கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

12.) அனைத்து அரசு பள்ளிகளிலும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இணைய பாதுகாப்பு, வெறுப்பை வளர்க்கும் செய்திகள், மற்றும் தவறான தகவல்களை கண்டறிவது குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும்.

13.) அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் 50 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

14.) கன்னிமாரா நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்கள், குழந்தைகள், சொந்த நூல்கள் படிக்கும் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டு சிறப்பு பிரிவுகள் தொடங்கப்படும்.

15) சிறைச்சாலைகளில் உள்ள எழுதப் படிக்க தெரியாத 1249 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படும்.

16.) புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது ரூபாய் 11 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.

17.) நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மற்றும் அரிய நூல்கள், அறிஞர் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் தனி வெளியீடாகவும் கூட்டு வெளியீடாகவோ கொண்டுவரப்படும்.

18.) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பதிப்பகங்களோடு ஒப்பந்தம் மேற்கொண்டு உலகப் புகழ்பெற்ற இலக்கியங்கள் மற்றும் உலக இயக்கங்களின் எளிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான நூல் வரிசைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கொண்டுவரப்படும். உள்ளிட்ட  26 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

Tags:
#போலிசெய்திகள்  # வெறுப்புசெய்திகள் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..