சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொந்தரவு: மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியிடம் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார்..!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொந்தரவு: மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியிடம் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார்..!!
By: TeamParivu Posted On: April 01, 2023 View: 68

கல்லூரியில் சிறப்பு பயிற்சி என்ற பெயரில் பேராசிரியர் உட்பட 4 பேர் தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும், வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும், விசாரணை நடத்த வந்த மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியிடம் 100 மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக தொந்தரவு நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் வீடியோ கால் மூலம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மிகவும் பழமையான கல்லூரி என்பதால் வெளிநாடுகள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பரத நாட்டியம், நட்டுவாங்கம் மற்றும் இசை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள் சிலர், தங்களுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமசந்திரனிடம் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் ஒன்றாக பதிவு செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலாஷேத்ரா கல்லூரியில் அதிகளவில் வெளிநாட்டு மாணவிகள் பயன்று வருகின்றனர். இதனால் மாணவிகளின் குற்றச்சாட்டுக்கு தேசிய மகளிர் ஆணையம் தனி கவனம் செலுத்தியது.

இதுகுறித்து உடனே தேசிய மகளிர் ஆணையம் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு விளக்கம் கேட்டிருந்தது. அதன்படி கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை குழு அமைத்தார். அதன்படி விசாரணை குழு கல்லூரி வளாகத்தில் மாணவிகளை ஒன்றாக அமரவைத்து பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர். பொது வெளியில் விசாரணை நடத்தியதால் மாணவிகள் யாரும் பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிக்க முன் வரவில்லை. இதையடுத்து விசாரணை குழு தங்களது அறிக்கையை கலாஷேத்ரா இயக்குநரிடம் அளித்தனர்.

அதன் பிறகு, கலாஷேத்ரா மிகவும் பழமையான கல்வி நிறுவனம் என்பதால் அதன் பெயரை கெடுக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்புவதாக குற்றம்சாட்டி இருந்தார். அதனை தொடர்ந்தும் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் மீண்டும் பாலியல் தொடர்பாக குற்றம்சாட்டி வெளியே சொன்னால் மிரட்டுவதாக பதிவு செய்து இருந்தனர். அதைதொடர்ந்து மீண்டும் தேசிய மகளிர் ஆணையர் மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர். பிறகு மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வாரம் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் டிஜிபியை நேரில் சந்தித்து தங்களது விசாரணை அறிக்கையை அளித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவிகள் பலர் தொடர்ந்து கலாஷேத்ராவின் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வந்ததால், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேற்று முன்தினம் கலாஷேத்ரா கல்லூரிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மாணவிகள் பேராசிரியர் ஹரி பத்மன், உதவி நடனஆசிரியர்களான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணா, ஸ்ரீநாத் ஆகியோர் ‘சிறப்பு நடன பயிற்சி’ என்று அடிக்கடி வாட்ஸ் அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அழைக்கின்றனர். பிறகு சிறப்பு நடன பயிற்சியின் போது, எங்கள் உடல் பாகங்களை தொட்டும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும் குற்றம்சாட்டினர்.

பிறகு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் ருக்மணி தேவி நுண் கலை கல்லூரி முதல்வரிடம் தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும், கல்லூரியில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் உட்பட 4 பேரை காப்பாற்றும் வகையில் விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறி திடீரென கொதித்து எழுந்து மாணவிகள் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது, பாலியல் தொந்தரவு செய்து வரும் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என கையில் பாதகைகளுடன் கல்லூரி மற்றும் 4 பேருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உடனே கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என கூறினர். இதனால் ரேவதி ராமச்சந்திரனை அங்கிருந்து வெளியே செல்ல முயன்றார். ஆனால் மாணவிகள் அவரை வெளியே விடாமல் சூழ்ந்து கொண்டனர். இதனால் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பிறகு ரேவதி ராமச்சந்திரனை உடன் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நிலைமை கைமீறி போனதால் கலாஷேத்ரா இயக்குநர் கல்லூரியை வரும் 6ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக அவசர சுற்றறிக்கை வெளியிட்டனர். ஆனால் சுற்றறிக்கையை பொருப்படுத்தாமல் மாணவிகள் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக கூறிவிட்டனர். அதைதொடர்ந்து மாணவிகளின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர்கள் கல்லூரி முன்பு ஒன்று கூடினர். இதையடுத்து கல்லூரி முன்பு பதற்றம் நிலவியதை தொடர்ந்து உடனே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் விடிய விடிய இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது.

இதையடுத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவிகளிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் 100 பேர் ‘கல்லூரியில் எங்களுக்கு முறையாக பாதுகாப்பு இல்லை. சிறப்பு பயிற்சி என்ற பெயரில் தங்களை தனித்தனியாக அழைத்து பேராசிரியர் உட்பட 4 பேர் தொந்தரவு செய்து வருவதாக எழுத்துப்பூர்வமாக புகார் கடிதத்தை வழங்கினர்.
 பிறகு பேராசிரியர் ஹரி பத்மன், உதவி நடனஆசிரியர்களான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணா, ஸ்ரீநாத் ஆகியோரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 12 மாணவிகளிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் பலர், தங்களை சிறந்த நடன கலைஞராக உருவாக்கி மேடை ஏற்றுவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டி வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதை குமாரி எழுத்து வடிவில் பதிவு செய்து கொண்டார்.

அதோடு இல்லாமல் பேராசிரியர் உட்பட 4 பேர் மூலம் தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக முன்னாள் மாணவிகள் சிலர் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியிடம் வீடியோ கால் மூலம் புகார் அளித்தனர். கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகும், எங்களிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து தற்போதும், எங்களை அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வருவதாக கண்ணீர் மல்க புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
 மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி முன்னறிவிப்பு இன்றி போராட்டம் நடத்தும் மாணவிகளிடம் விசாரணை நடத்த சென்றதால், கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

எங்களை அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வருவதாக கண்ணீர் மல்க புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
 மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி முன்னறிவிப்பு இன்றி போராட்டம் நடத்தும் மாணவிகளிடம் விசாரணை நடத்த சென்றதால், கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இருந்தாலும், குமாரி போராட்டம் நடத்தும் மாணவிகளிடம் முழுமையாக விசாரணை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். குமாரியின் வேண்டுகோளை ஏற்று 2 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மாணவிகள் கலைந்து செல்வதாக உறுதி அளித்துள்ளனர். இருந்தாலும், கல்லூரி முன்பு பாதுகாப்புக்காக உதவி கமிஷனர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கலாஷேத்ரா கல்லூரி வளாகத்தில் நேற்றும் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

* பாலியல் தொந்தரவு குறித்து தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம்
கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போராட்டம் நடத்திய மாணவிகள் அனைவரும் இணைந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்று இ-மெயில் மூலம் அனுப்பி வைத்தனர். அந்த கடிதத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் பாலியல் தொந்தரவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை தொந்தரவு செய்து வரும் 4 பேரை காப்பாற்ற கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே எங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் எழுதி இருப்பதாக போராட்டம் நடத்திய மாணவிகள் சிலர் தெரிவித்தனர்.

* வெளிநாட்டு மாணவிகளும் சீரழிப்பா?
பாலியல் தொடர்பாக போராட்டம் நடத்திய மாணவிகளுக்கு முன்னாள் மாணவிகள் பலர் தங்களது ஆதரவை நேரிலும், சிலர் இனையதளம் மூலமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அப்போது, முன்னாள் மாணவிகள் சிலர், எங்களை போன்று கடந்த 15 ஆண்டுகளில் வெளிநாட்டு மாணவிகள் பலரை இந்த 4 பேரும் மிரட்டி சீரழித்ததாகவும், அவர்களில் பலர் கல்லூரியில் இருந்து பாதியிலேயே தங்களது நாடுகளுக்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வெளிநாட்டு மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.

* விசாரணை அறிக்கை திங்கள்கிழமை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்
போராட்டம் நடத்திய மாணவிகளிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி நிருபர்களிடம் கூறியதாவது: கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை செய்து திங்கள்கிழமைக்குள் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். சில மாணவிகள் ஐதராபாத் சென்றுள்ளதால் 5 மாணவிகளை ‘ ஸ்கைப்’ மூலமாகவும், 12 மாணவிகளை நேரிலும் விசாரணை செயத்தேன். மேலும் 100 மேற்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் அளித்துள்ளனர். திங்கள்கிழமை மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதால், போராட்டத்தை நிறுத்த சொல்லி மகளிர் ஆணையம் சார்பில் கோரிக்கை வைத்தேன்.

மாணவர்களும் போராட்டத்தை கைவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். நான் இங்கு விசாரணைக்கு வருவதாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. அதனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் இங்கு இல்லாததால் அவர்களிடம் நான் விசாரணை நடத்தவில்லை. கல்லூரி முதல்வர் மட்டும் என்னை பார்த்தார். போராட்டத்தை முடக்குவதற்கான வேலையை நிர்வாகம் செய்வதாகவும் மாணவிகள் என்னிடம் புகார் அளித்துள்ளனர். கலாஷேத்ராவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் மாணவிகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவு இருந்து வந்ததாகவும், முன்னாள் மாணவிகள் 3 பேர் தொலைபேசியில் புகார் தெரிவித்தனர். அவர்களை முறையாக புகார் அளிக்க சொல்லி உள்ளேன். இவ்வாறு குமாரி கூறினார்.

Tags:
#மாணவிகள்  # புகார்  # கலாஷேத்ராகல்லூரி 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..