3 வழித்தடங்கள் சந்திக்கும் வகையில் மெட்ரோ ரயில் முனையமாகும் கோயம்பேடு: அதிகாரிகள் தகவல்..!!

3 வழித்தடங்கள் சந்திக்கும் வகையில் மெட்ரோ ரயில் முனையமாகும் கோயம்பேடு: அதிகாரிகள் தகவல்..!!
By: TeamParivu Posted On: April 28, 2023 View: 70

சென்னையில் 3 வழித்தடங்கள் சந்திக்கும் முனையமாக கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் மாற்றப்படுவதாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆரம்பம் முதலாகவே பொதுமக்கள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.
இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளது.
மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் சாலையில் அமைய உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக மெட்ரோ ரெயில் சுரங்கம் பல அடுக்குகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையங்கள் குறுகியதாகவும், ஆழத்திலும் அமைய உள்ளது.
இந்த 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் மெட்ரோ ரயில் நிலையம் தான் இருப்பதிலேயே தரை மட்டத்தில் இருந்து மிகவும் ஆழத்தில் அமையும் ரயில் நிலையமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2026ம் ஆண்டில் இந்த 2ம் கட்ட பணிகள் முடிந்து பொதுமக்கள் விரைவு சேவைக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும், என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையின் அடுத்த மெட்ரோ ரயில் முனையமாக கோயம்பேடு அமைய இருக்கிறது. கோயம்பேட்டில் தற்போதுள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மேலே 2ம் கட்ட திட்டத்தில் ரயில் நிலையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஆவடி வரை பாதைகளை நீட்டிக்க அதிக நடைபாதை அமைக்கப்படுகிறது. 2ம் கட்ட திட்டத்தில் மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான 5வது வழித்தடத்தில் கோயம்பேடு இடம்பெறுகிறது.
2வது கட்ட திட்டத்தில் முதலில் கோயம்பேடு இடம்பெறவில்லை. பின்னர் அது மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் திருமங்கலம் முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் பாதை நீடிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோயம்பேடு ரயில் நிலையம் குறைந்தபட்சம் 3 வழித்தடங்களை இனணக்கும் முனையமாக மாற்றப்பட உள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சென்னையில் 2ம் கட்ட பணியின் 5வது வழித்தடம் கோயம்பேட்டில், சென்ட்ரல் – பரங்கிமலை இடையேயான வழித்தடத்துடன் இணைக்கப்படும். எதிர்காலத்தில் திருமங்கலம் – ஆவடி விரிவாக்க பாதையும் இனணக்கப்படும்.

கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிலைய கட்டிடம் 2வது நிலையத்தின் வடிவமைப்பை மாற்றி அமைத்து, ஆவடி வரையிலான நீட்டிப்பு பாதைக்கு கூடுதல் தளங்களை கட்டுவதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக விட்டுவிடுகிறோம். அந்த நடைமேடைகளை நாங்கள் 2ம் கட்ட நிலையத்தின் லெவலுடன் இணைப்போம். இது முதல்கட்ட ரயில் நிலையத்துடன் இணைக்கப்படும். முகப்பேர், அம்பத்தூர் ஆவடியில் வசிப்பவர்கள் சென்ட்ரல் அல்லது எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு செல்ல எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் மூலம் ஏறி கோயம்பேட்டில் நடைமேடைகளை மாற்றிக் கொள்ளலாம். விமான நிலையத்துக்கும் நேரடியாக செல்லலாம். இதேபோல மாதவரம் அல்லது ஓஎம்ஆர் பகுதிக்கும் பயணிக்க முடியும்,’’ என்றார்.

நவீன தொழில்நுட்பம்
மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் அடையாறு ஆற்றின் கீழே அமைய இருக்கும் இந்த சுரங்கப்பாதை மக்களை வியக்க வைக்கும்படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆரம்பகட்ட பணிகள் நடந்தது முடிந்துள்ளன. அடையாறு ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக துளையிடும் ராட்சத இந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை தோண்டப்பட உள்ளது.

3 அடுக்கு சுரங்கம்
மாதவரம் – சிறுசேரி வரை அமைய கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை மற்றும் பாரதிதாசன் சாலையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மிக குறுகிய இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக மெட்ரோ ரெயில் சுரங்கம் பல அடுக்குகளாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையங்கள் குறுகியதாகவும், ஆழத்திலும் அமைய உள்ளது. 35 மீட்டர் ஆழத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக 2 சுரங்க வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளன. மயிலாப்பூரில் மெட்ரோ ரெயில் 3 அடுக்கு சுரங்கப்பாதையாக அமைக்க திட்டமிட்டு உள்ளது.

கட்டுப்பாட்டு அமைப்பு
இந்த 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சிக்னல், கட்டுப்பாடு மற்றும் காணொளி மேலாண்மை அமைப்பு நிறுவப்படவுள்ளது. தொலைத் தொடர்பு அடிப்படையில் இயங்கும் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் டிரைவர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும். இந்த அமைப்பு நிறுவப்பட்ட உடன் பல்வேறு சோதனைகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இந்த அமைப்பு ரயில்களுடன் ஒங்கிணைப்பு செய்யப்படும்.

Tags:
#வழித்தடங்கள்  # மெட்ரோரயில்  # கோயம்பேடு 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..