புதிதாக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில் துறை 4 அமைச்சர்கள் இலாகா மாற்றம்..!!

புதிதாக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில் துறை 4 அமைச்சர்கள் இலாகா மாற்றம்..!!
By: TeamParivu Posted On: May 12, 2023 View: 67

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா நேற்று பதவி ஏற்றார். அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு அமைச்சரவையில் தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதியமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவை சிறிய அளவில் மாற்றியமைக்கப்படும் என்று கடந்த சில நாட்களாகவே கூறப்பட்டு வந்தது. குறிப்பாக, முதல்வர் வருகிற 23ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றங்கள் இருக்கும் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் கவர்னர் மாளிகையில் இருந்து, கடந்த 9ம் தேதி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. அதன்படி, புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 11ம் தேதி பதவியேற்றுக்கொள்வார் என்று ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 9.30 மணி முதலே அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்தனர். 10.05 மணிக்கு டி.ஆர்.பி.ராஜா கவர்னர் மாளிகைக்கு வந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர். சரியாக 10.25 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு வந்தார். 10.29 மணிக்கு பதவி ஏற்பு விழா மண்டபத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். சரியாக 10.30 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

தலைமை செயலாளர் இறையன்பு, புதிய அமைச்சரை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்து பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது, ‘உளமாற உறுதி கூறுகிறேன்’ என்று கூறி டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றுக் கொண்டதும், புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கவர்னர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். கவர்னரும் புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பூங்கொத்து கொடுத்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து, தேசிய கீதம் பாடப்பட்டது. 8 நிமிடத்தில் பதவி ஏற்பு விழா முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் ெகாண்டனர்.
பதவி ஏற்பு விழாவில், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், டி.ஆர்.பி.ராஜா குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழா மேடையில் நான்கு இருக்கைகள் மட்டும் போடப்பட்டிருந்தது. அதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்பேரில், தமிழ்நாடு அமைச்சர்கள் 4 பேரின் இலாகா நேற்று மாற்றி அமைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. அதன்படி, தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை, திட்டம், மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால நன்மைகள் மற்றும் புள்ளியல் துறை, தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சி துறை வழங்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜூக்கு பால் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவது இது 3வது முறையாகும். முன்னதாக, திமுக அரசு 2021ம் ஆண்டு மே 7ம் தேதி பதவி ஏற்றபிறகு முதன் முறையாக 2022 மார்ச் மாதம் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறைக்கும், அந்த துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2வது முறையாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 2022 டிசம்பர் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அப்போது, ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், முத்துசாமி, காந்தி, சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் என 10 அமைசசர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:
#தொழில்துறை  # அமைச்சர்கள்  # இலாகா 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..