கோயில்களின் தகவல்களை எளிதாக அறியும் வகையில் ‘திருக்கோயில்’ என்ற செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!

கோயில்களின் தகவல்களை எளிதாக அறியும் வகையில் ‘திருக்கோயில்’ என்ற செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!
By: TeamParivu Posted On: May 18, 2023 View: 66

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் தகவல்களை எளிதாக அறியும் வகையில் ‘திருக்கோயில்’ என்ற கைபேசி செயலியை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் தொடங்கிவைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (18.05.2023) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “திருக்கோயில்” எனும் கைபேசி செயலியையும், 48 முதுநிலை திருக்கோயில்களின் பிரசாதங்களை பக்தர்களின் இல்லங்களுக்கு ஒன்றிய அரசின் அஞ்சல் துறையுடன் இணைந்து அனுப்பி வைக்கும் திட்டத்தினையும் தொடங்கி வைத்தார்.

பின்னர், பேசிய அமைச்சர்; முதலமைச்சரின் நல் வழிகாட்டுதலின்படி வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் தொழில்நுட்பத்திற்கேற்ப இந்து சமய அறநிலையத்துறையும் பல்வேறு மாறுதல்களை துறையில் மேற்கொண்டு வருவதை பொதுமக்களும் ஊடகத்துறையினரும் நன்கு அறிவீர்கள். அதில் ஒரு மைல் கல்லாக திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை பக்தர்கள் எளிதில் அறிந்துகொண்டு பயன்படுத்திட ஏதுவாக திருக்கோயில் எனும் கைபேசி செயலி மற்றும் திருக்கோயில் பிரசாதங்களை பக்தர்கள் இல்லங்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்தினை இன்றைக்கு தொடங்கி வைத்துள்ளோம். இந்த செயலியின் மூலம் திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் திருக்கோயில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, திருக்கோயில்களை சென்றடைவதற்கான கூகுல் வழிகாட்டி,

பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதோடு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் திருக்கோயில்களுக்கு செல்லுகையில் மின்கல ஊர்தி, மற்றும் சாய்தளத்தில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வதற்கும் தரப்பட்டுள்ள தொலைபேசி எண் சேவையையும், அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் வழங்கலாம். மேலும், தேவாரம், திருவாசகம், திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை பக்தர்கள் கேட்டு மனநிறைவு பெறலாம். இச்செயலியில் முதற்கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை திருக்கோயில்கள் இடம்பெற்றுள்ளன. அடுத்தகட்டமாக 88 திருக்கோயில்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மற்ற திருக்கோயில்களின் விவரங்களும் இணைக்கப்படும்.

இச்செயலியை ஆண்ட்ராய்டு வகை கைபேசிகளுக்கு Play Store-லிருந்தும், iOS வகை கைபேசிகளுக்கு App Store-லிருந்தும் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம். இந்த கைபேசி செயலியை பயன்படுத்தும்போது ஏற்படுகின்ற குறைபாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவித்தால் அவற்றை நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும். அந்த வகையில் செயலியை சிறப்பாக செயல்படுத்துவதற்கு அனைவரின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம். அதேபோல் பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை திருக்கோயில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயிலின் பிரசாதம் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு சென்றடைகின்ற ஒரு நல்ல சூழ்நிலையை செயல்படுத்தி இருக்கின்றோம்.

முதலமைச்சரின் ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருவது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியும் பெற்றிருப்பதில் நாங்களும் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்தியா முழுவதும் உள்ளவர்கள் திருக்கோயில் பிரசாதங்களை பெறுவதற்கு பிரசாதத்திற்குரிய கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை மட்டுமே வசூலிக்கப்படும். எந்தெந்த திருக்கோயிலுக்கு எந்தெந்த பிரசாதங்கள் சிறப்போ அவை அனுப்பி வைக்கப்படும். அடுத்த கட்டமாக, 3 மாத காலத்திற்குள் உலகம் முழுவதும், திருக்கோயில் பிரசாதங்களை அனுப்பி வைக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் முதன்முறையாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

எங்களுடைய எண்ணங்களை அலுவலர்களுடன் ஆலோசித்து செயல்படுத்தி இருக்கின்றோம். திருக்கோயில்களுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு 80ஜி-ன் கீழ் வரிவிலக்கு பெறலாம். மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலை பொறுத்தளவில் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. துறையின் சார்பில் உதவி ஆணையரை நியமித்து இருக்கின்றோம். அது மட்டுமல்லாமல் மாதத்திற்கு ஒருமுறை கூடுதல் ஆணையர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். இத்திருக்கோயில் தொடர்பாக வரப்பெற்ற புகார்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றோம். திருச்செந்தூர் உட்பட அனைத்து திருக்கோயில்களிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதை முழுமையாக தடுக்கின்ற முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வருகிறது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை பொறுத்தளவில் எங்களது ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

நீதிமன்றத்திற்கு செல்வதாக அக்கோயிலின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளதால் அங்கு நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து சொல்லலாம் என்று காத்திருக்கிறோம். சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலைப் பொறுத்தளவில் அங்கு என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவோ இவைகளையெல்லாம் சேகரித்துக் கொண்டு வருகிறோம் உரிய நேரத்தில் நிச்சயமாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம் பாராட்டி உள்ளது. இதுபோன்று துறையின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நீதிமன்றங்களே பாராட்டுகின்ற அளவிற்கு எங்களுடைய செயல்பாடுகள் அமையும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் குறித்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீடு செய்திருக்கிறது.

திருக்கோயில்களுக்கு வருகைதரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி வரிசை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதின் அடிப்படையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்களில் 3 மாத காலத்திற்குள் இவ்வசதி செயல்படுத்தப்படும். ஒரு சில திருக்கோயில்களில் மூலவர் அமைந்திருக்கின்ற இடங்களில் போதிய இட வசதி இல்லாததால் அவற்றில் எந்த வகையில் நடைமுறைப்படுத்தலாம் என திட்டமிட்டு கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர்ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் இயக்குநர் (தலைமையிடம்) பி.ஆறுமுகம், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, இணை ஆணையர்கள் அர.சுதர்சன், பொ.ஜெயராமன், இரா.செந்தில் வேலவன், அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் (வணிக மேம்பாடு) எஸ்.கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:
#கோயில்தகவல்  # திருக்கோயில்  # செயலி  # அமைச்சர்  # சேகர்பாபு  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..