27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் சென்னையில் கன மழை தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. பதிவு

27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் சென்னையில் கன மழை தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ. பதிவு
By: TeamParivu Posted On: June 20, 2023 View: 45

சென்னை: வங்கக் கடலில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் இணையும் நிகழ்வு நீடித்து வருவதால் நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும். 73 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்துக்கான இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதம் மழை பெய்துள்ளதும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வங்கக் கடலில் தென்கிழக்கு கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கி நேற்றும் நீடித்தது. இதன் காரணமாக சென்னை, மற்றும் புறநகர், சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் பல இடங்களில் தண்ணீர் காலையில் தேங்கியிருந்தது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தண்ணீரை அகற்றினர். சென்னையைப் போல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மழை கொட்டியது. சென்னையில் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பிறகு வட மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்துக்கான இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: வங்கக் கடலின் தென் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி காற்று செல்வதால் ஏற்பட்டுள்ள வளிமண்டல காற்று சுழற்சியால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் ஒரே நாள் இரவில் 160 மிமீ (16 செ.மீ.) மழை பெய்துள்ளது. அதே போல சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் 80 மிமீ மழை பெய்துள்ளது.
இது தவிர சென்னை ஆலந்தூரில் 140மிமீ, செம்பரம்பாக்கம் 130மிமீ, அண்ணா பல்கலைக் கழகம் 100மிமீ, மேற்கு தாம்பரம், மதுரவாயல், குன்றத்தூர், சென்னை டிஜிபி அலுவலகம் 90 மிமீ, நுங்கம்பாக்கம், கொரட்டூர், எம்ஜிஆர் நகர் 80 மிமீ, பூந்தமல்லி, சத்யபாமா பல்கலைக் கழகம் 70 மிமீ, அயனாவரம், சென்னை ஆட்சியர் அலுவலகம், வில்லிவாக்கம் 60 மிமீ, புழல், மாமல்லபுரம், பெம்பூர், தண்டையார் பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் 50 மிமீ, சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மாதவரம், வாலாஜாபாத் 40 மிமீ, மரக்காணம், திண்டிவனம், கேளம்பாக்கம், செய்யூர், கடலூர், புவனகிரி,சிதம்பரம் 30 மிமீ மழை பெய்துள்ளது. பிற மாவட்டங்களில் 20மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில், மத்திய வங்கக் கடல் பகுதியில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்றும் இணைகின்றன. இது வடக்கு நோக்கி நகர்கிறது. அதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராணிப் பேட்டை, மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வரும் இந்த பருவகாலத்தில் தமிழ்நாட்டில் அதிக அளவில் மழைபெய்வது அரிதான ஒன்று. மீனம்பாக்கத்தில் பெய்த மழையை பொருத்தவரையில் இது கடந்த 73 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பெய்த அதிக மழையாகும்.

Tags:
#சென்னை 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..