கலைஞருக்கு கோட்டம் கண்டோம் ஜனநாயக போர்க்களத்தை சந்தித்து நாட்டு நலன் காண்போம்: மதவெறி பாஜவை வீழ்த்துவதே இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்கும்; தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கலைஞருக்கு கோட்டம் கண்டோம் ஜனநாயக போர்க்களத்தை சந்தித்து நாட்டு நலன் காண்போம்: மதவெறி பாஜவை வீழ்த்துவதே இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்கும்; தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
By: TeamParivu Posted On: June 22, 2023 View: 44

சென்னை:
கலைஞருக்கு கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயக போர்க்களத்தை சந்தித்து நாட்டு நலன் காண்போம். மதவெறி கொண்ட பாஜவை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையை காத்திடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒரு நூற்றாண்டுக்கு முன் உதித்த திராவிடச் சூரியன் நம் தலைவர் கலைஞர். 14 வயதிலிருந்து தன் போராட்டக் கதிர்களை வீசி, தமிழ்மொழியையும் தமிழினத்தையும், தமிழ்நாட்டையும் கடைசிவரை ஒளி திகழச் செய்த சூரியன் அவர். முத்தமிழறிஞர் கலைஞரை எதிர்காலத் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். தளராத முயற்சியுடன், திட்டமிட்ட இலக்கு நோக்கி, அயராது உழைத்தால் எளிய மனிதனும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவதற்கும் திருவாரூரில் உயர்ந்து நிற்கிறது கலைஞர் கோட்டம்.
கலைஞர் கோட்டத்தைத் திறக்கின்ற பெரும் வாய்ப்பு எனக்கு வாய்த்த நிலையில், கோட்டத்தினைப் பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள், கழக நிர்வாகிகள் எல்லாரும் கண்கள் விரிந்திட, கலைஞரின் பேராற்றலைக் கண்டு வியந்தனர். கலைஞரை நேரில் பார்க்க வாய்ப்பில்லாத தலைமுறையினர், இந்தக் கோட்டத்திற்கு வந்து அவரது வாழ்க்கை வரலாற்றை, சளைக்காத போராட்டத்தை, தொலைநோக்குத் திட்டங்களை, நிகரற்ற படைப்பாற்றலைத் தெரிந்து கொள்ளும்போது, இப்படிப்பட்ட அற்புதத் தலைவரைப் பார்க்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தைத் தணிக்கும் வாய்ப்பு இது.
பள்ளி – கல்லூரி மாணவச் செல்வங்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் திருவாரூர் திருத்தலத்தில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும். திமுகவினர் தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது மட்டுமல்ல, நேரத்தை ஒதுக்கி ஒரு முறையேனும் கலைஞர் கோட்டத்தைக் காண வேண்டும். கோட்டத்தைக் காணும்போது திமுகவினரின் உள்ளத்தில் உத்வேகம் பிறக்கும். திருவாரூர் திருத்தலத்தின் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாடலிபுத்திரம் என வரலாற்றில் பெயர் பெற்ற பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் உரையாற்றியது போல, இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும்.
அதற்கான முன்னெடுப்பை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மேற்கொண்டிருக்கிறார். ஜூன் 23ம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை – ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது. கலைஞருக்குக் கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும்.

Tags:
#முதல்வர் மு.க.ஸ்டாலின் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..